'சீதா ராமம்' மற்றும் 'ஹாய் நானா' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலில் இருப்பதாகச் பரவிய வதந்திகளுக்கு காட்டமாகப் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு மிருணாள் தாகூர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (24) ஆகிய இருவரும் தனித்தனியாக வந்து சென்றனர். இருவரின் வீடியோக்களும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, 34 வயதான மிருணாள் தாகூரும், அவரை விட 10 வயது குறைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலித்து வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாகப் பரவின.
இந்த வதந்தி தொடர்பாக இணையத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றின் கமெண்ட் பகுதியில் நேரடியாகப் பதிலளித்த நடிகை மிருணாள் தாகூர், தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில்,
"ப்ரோ.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள்! நாங்கள் எங்கே ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுங்கள்? படித்தவர்கள் கூட இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை எப்படி உண்மையென நம்புகிறீர்கள்? நாட்டில் பேச வேண்டிய எவ்வளவோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. Gen Z தலைமுறையினரிடம் இருந்து கற்றுக் கொண்டு, பயனுள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி வீடியோக்களை உருவாக்குங்கள், அப்போது தான் நிறைய வியூஸ் கிடைக்கும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னிந்திய மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பரபரப்பாக நடித்து வரும் மிருணாள் தாகூர், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே கடந்த காலங்களில் நடிகர் தனுஷுடன் இவரை இணைத்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் வீரருடனான இந்த வதந்தியையும் அவர் நேரடியாக மறுத்துள்ளார்.