சினிமா செய்திகள்

உடலில் சிறு உயிரைச் சுமக்கும் தருணம்: கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி!

உடல் கேட்கும் ஓய்வையும் மாற்றங்களையும் வழங்க வேண்டியது அவசியம்" என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனது கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, கர்ப்ப காலத்தில் உடலின் தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி மற்றும் உடல்தகுதியில் எப்போதும் தீவிர ஆர்வம் காட்டும் நடிகை சமந்தா, கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி இலக்குகள் முற்றிலும் மாறிவிடும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு சிறிய மனிதனை உடலுக்குள் வளர்க்கும்போது நமது உடற்பயிற்சியின் நோக்கங்கள் மாறுகின்றன. இந்த உடல் செய்த அதிசயங்களிலேயே மிக வலிமையான விஷயம் இதுதான். உடல் கேட்கும் ஓய்வையும் மாற்றங்களையும் வழங்க வேண்டியது அவசியம்" என அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் செஸ்ட் பிரஸ், கெட்டில்பெல் பயிற்சிகள் மற்றும் டெட்லிஃப்ட் போன்ற வலிமைப் பயிற்சிகளை அவர் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் அவரது கர்ப்ப காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்ட பயிற்சிகளாகும்.

தனது பதிவில் ரசிகர்களுக்கு அவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். "நான் பல வருடங்களாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். எனது மருத்துவரின் அனுமதி மற்றும் சிறப்பு சான்றிதழ் பெற்ற கர்ப்பகால பயிற்சியாளரின் மேற்பார்வையிலேயே இவற்றைச் செய்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகாலமும் வேறுபட்டது. எனவே எனது பயிற்சிகளைப் பார்த்து யாரும் அப்படியே பின்பற்ற வேண்டாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அண்மையில் தனது கர்ப்பத்தை முறைப்படி அறிவித்திருந்தார். தான் நடித்து தயாரித்த 'மா இண்டி பங்காரம்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், விரைவில் மகப்பேறு விடுமுறை பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் மீண்டும் புதிய திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் உறுதியளித்திருந்தார்.