சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையிலும், இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் முக்கியக் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மோகன்லாலின் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட் ஆன ஜிஷாத் ஷம்சுதீன், நெல்சன் மற்றும் படக்குழுவினர் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தனது கடுமையான ஏமாற்றத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' முதல் பாகத்தில் மோகன்லால் சில நிமிடங்களே வந்தாலும், அவரது "எந்தா மோனே?" என்ற மாஸ் டயலாக் மற்றும் ஸ்டைலான தோற்றம் தியேட்டரையே அதிர வைத்தது. இதனால் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், நேற்று வெளியான 'ஜெயிலர் 2' படத்தில் மோகன்லால் நடித்த பல முக்கியக் காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 'ஜெயிலர் 2' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரில் காட்டப்பட்ட மோகன்லாலின் மாஸான 2 நொடி காட்சிகூடத் தியேட்டர் பதிப்பில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து மோகன்லாலின் ஸ்டைலிஸ்ட் ஜிஷாத் ஷம்சுதீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது,
"ஜெயிலர் 2 வெளியீட்டை ஒட்டி ஒரு முக்கியமான உண்மையை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நாங்கள் உழைத்த விதம் எனக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்தது. ட்ரெய்லரில் காட்டப்பட்ட 2 நொடிப் பார்வையில் கூட எங்கள் உழைப்பு தெரிந்தது. ஆனால், படம் வெளியான பிறகு பார்த்தால், மோகன்லால் சாருக்காக நாங்கள் பிரத்யேகமாக வடிவமைத்த 3 வித்தியாசமான காஸ்டியூம் லுக் காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. ட்ரெய்லரில் வந்த காட்சியும் படத்தில் இல்லை.
திரைத்துறையில் எனக்கிருக்கும் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், மோகன்லால் சார் போன்ற ஒரு இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை இவ்வாறு கத்தரிப்பது தேவையற்ற ஒன்று. நம்முடைய சூப்பர் ஸ்டார் திரையில் இந்த அளவிற்குச் சுருக்கப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை 'ஜெயிலர் 3' என்ற அடுத்த பாகம் உருவானால், அதில் நான் கண்டிப்பாகப் பகுதிப் பாத்திரமாக இருக்க மாட்டேன். என்னை நம்பிய மோகன்லால் சாருடைய ரசிகர்கள் அனைவருக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் எந்த ஒரு லாபத்திற்கோ, கோடிக் கணக்கான பாக்ஸ் ஆபீஸ் கிளப்பிற்கோ அல்லது நட்சத்திர அந்தஸ்திற்கோ ஆசைப்பட்டு நிற்பவன் அல்ல. நான் கலைக்காகவும், ரசிகர்களுக்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக என் மோகன்லால் சாருக்காகவும் மட்டுமே நிற்கிறேன். எனது பயணத்தில் துணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி!" என்று மிகவும் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
ஜிஷாத் ஷம்சுதீனின் இந்தப் பதிவிற்கு மோகன்லால் ரசிகர்கள் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். முதல் பாகத்தில் மோகன்லாலுக்குக் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பை நெல்சன் இந்த இரண்டாம் பாகத்தில் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றும், இது மோகன்லால் போன்ற ஒரு லெஜண்டரி நடிகருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், மோகன்லால் காட்சிகள் நீக்கப்பட்ட விவகாரம் தற்போது கோலிவுட் மற்றும் மாலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.