தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை வென்ற பிரபல குணச்சித்திர நடிகர் மைம் கோபி, தற்போது புதிய பரிமாணத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார்.
'யுவர்பேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் தங்களது 3-வது திரைப்படத்தில் மைம் கோபியை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறது. விரைவில் தனது ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் 'யுவர்பேக்கர்ஸ் ஓடிடி' தளத்திற்காகப் பல குறும்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் சந்தோஷ், இந்த புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட ஒரு வலுவான சமூகக் கருத்துள்ள கதையாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் கிஷோர் ஆதித்யா கூறுகையில், “பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட வலுவான கதைக்களம் என்பதால், சமூகப் பொறுப்புடன் இந்தப் படத்தை தயாரிக்க நாங்கள் முன்வந்தோம். இதுவரை ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனது அசாத்திய திறமையை நிரூபித்துள்ள மைம் கோபியை, எங்கள் யுவர்பேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்” என்று தெரிவித்தார்.
இத்திரைப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.