சினிமா செய்திகள்

நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’: ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ஃபர்ஸ்ட் லுக்!

கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

உத்ரா புரொடக்ஷன்ஸ், டி.ஜே. இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதையாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்:

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்ம பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்த பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்ப கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.

சுவாரஸ்ய கதை:

தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.