சினிமா செய்திகள்

வீட்ல Couple...ஆபிஸ்ல Strangers - நவம்பர் 18 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’!

100 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் ஓவ்வொரு புதன்கிழமையும் 4 புதிய எபிசோடுகள் வெளியிடப்படும்.

பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய தமிழ் அலுவலக நகைச்சுவைத் தொடரான ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’, நவம்பர் 18-ம் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அப்துல் கபீஸ் இயக்கத்தில், ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ள இத்தொடர் மொத்தம் 100 எபிசோடுகளைக் கொண்டதாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு புதிய எபிசோடுகள் வீதம் இத்தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

ஒரே ஆபிஸில் வேலை; ரகசியம் காக்கும் தம்பதி

கார்ப்பரேட் ஐடி அலுவலகப் பின்னணியில் உருவாகியுள்ள இத்தொடர், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் போராடும் அறிவு (பிரதீப் ஆண்டனி) மற்றும் ஐஸ்வர்யா (ஸ்மேஹா மணிமேகலை) என்ற இளம் தம்பதியினரைச் சுற்றி நகர்கிறது.

இருவருக்கும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பணிபுரியக் கூடாது என்ற நிறுவனத்தின் கடுமையான விதிமுறையால், தங்களது வேலையையும் பொருளாதார நிலையையும் பாதுகாக்க, அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் போல நடிக்க இருவரும் முடிவு செய்கின்றனர்.

ரகசிய திருமணம்

ஆபிஸ் மீட்டிங்குகள், காபி பிரேக்குகள், கண்டிப்பான மேலாளர் மற்றும் ஆர்வத்துடன் கேள்வி கேட்கும் சக ஊழியர்களுக்கு மத்தியில் தங்களது திருமண ரகசியத்தை மறைக்க அவர்கள் கூறும் பொய்களும், அதனால் ஏற்படும் கலகலப்பான குழப்பங்களுமே இத்தொடரின் மையக்கருவாகும். நகைச்சுவைக்கு மத்தியில், இன்றைய இளம் தம்பதிகளின் பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தங்களையும் இத்தொடர் பேசுகிறது.

படக்குழுவினரின் சுவாரசியப் பகிர்வுகள்

இத்தொடரில் சந்திரபோஸ் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் மகிழ் திருமேனி கூறுகையில், "சூழலில் இருந்து இயல்பாக உருவாகும் நகைச்சுவை எப்போதும் ரசிக்கும்படி இருக்கும்.

ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல்களும், தொடர்ந்து ஏற்படும் தவறான புரிதல்களும் இதில் ஏராளமான சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன" என்றார்.

நாயகன் பிரதீப் ஆண்டனி பேசுகையில், "திருமணமானதை அலுவலகத்தில் மறைப்பது சாதாரண விஷயமல்ல. ஒரு நல்ல கணவராக இருப்பதற்கும், ஆபிஸில் அந்நியரைப் போல நடிப்பதற்கும் இடையில் அறிவு படும் பாட்டை அலுவலக வேலைக்குச் செல்பவர்கள் அனைவரும் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.

நகைச்சுவை தொடர்

நாயகி ஸ்மேஹா மணிமேகலை, இதில் வரும் சூழல்கள் சிரிப்பை வரவழைத்தாலும், இணைந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கப் போராடும் தம்பதியின் உண்மையான உணர்வுகளும் இதில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேபோல் நடிகை சனம் ஷெட்டி, திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு தான் ஐடி துறையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், ஆபிஸ் மீட்டிங்குகள் மற்றும் அலுவலக அரசியலை உடனடியாகத் தன்னால் உணர முடிந்ததாகவும், அன்றாட அனுபவங்களை நகைச்சுவையாக மாற்றியிருப்பதே இத்தொடரின் சிறப்பு என்றும் கூறினார்.

JioHotstar

ஜியோஹாட்ஸ்டாரின் 'லாங் ரன்னிங் ஷோஸ்' வரிசையில் இணையும் இத்தொடர், வாரந்தோறும் பார்வையாளர்களுக்குப் புதுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT