சினிமா செய்திகள்

சினிமாவை அரசியல்படுத்திய மா கலைஞன் மணிவண்ணன்.. நினைவு தினம் இன்று!

வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் முற்போக்கு கருத்துக்களையும் பகுத்தறிவு பார்வையையும் தன் வசனங்கள் மூலம் மணிவண்ணன் வெளிப்படுத்த தவறியதில்லை.

தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்த பல கலைஞர்கள் உண்டு. அவர்களில் மணிவண்ணனுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

இயக்குநராகவும், நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்துக்கும் நிறைய செய்துள்ளார்.

பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் மக்களின் சிந்தனையை தூண்ட வேண்டும் என சிந்தித்தவர் மணிவண்ணன்.

வசனகர்த்தா

மணிவண்ணன் சினிமாவுக்குள் வந்தது பாரதிராஜாவின் 'நிழல்கள்' படம் மூலமே. அப்படத்திற்கு கதை - வசனகர்த்தா மணிவண்ணனே. ஆனால் அந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் மணிவண்ணன் வசனம் எழுதி 1981இல் வெளியான படம் 'அலைகள் ஓய்வதில்லை' பெரு வெற்றி பெற்றது.

இயக்குநர்

1982 இல் கோபுரங்கள் சாய்வதில்லை மூலம் இயக்குநராக உருவெடுத்தார் மணிவண்ணன். கணவனால்

ஒதுக்கப்படும் கிராமத்து பெண்ணின் மனநிலையை அப்படம் சித்தரித்தது.

படத்தின் பெரு வெற்றியை தொடர்ந்து 80கள்மற்றும் 90களின் இடைப்பகுதி வரை 15 ஆண்டுகளுக்குள் பல ஜானர்களில் 40 படங்களை இயக்கினார் மணிவண்ணன்.

1994இல் இவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'அமைதிப்படை' படதிற்கு சினிமா ரசிகர்களை அரசியல்படுத்திய பெருமை உண்டு. இன்றுவரை இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக்.

பகுத்தறிவு

இளம் வயது முதல் மார்சிய இயக்கங்களுடன் பயணப்பட்ட மணிவண்ணன் இயக்கிய மற்றும் நடித்த படங்களிலும் அதன் கூறு ஏதாவதொரு வகையில் வெளிப்படும்.

சத்யராஜுடன் இணைந்து தோழர் பாண்டியன் படத்தை எடுத்த மணிவண்ணன் அதில் மார்க்ஸிய அரசியலை நேரடியாகவே பேசினார்.

வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1997 இல் வெளியான கடவுள் படத்தில் கடவுளாக நடித்து அவர் பேசிய சாதி, மத மறுப்பு விஷயங்கள் இன்றளவும் பொருத்தப்பாடு உடையது.

2001இல் தான் இயக்கிய 'ஆண்டான் அடிமை' படத்திலும் சாதிய ஏற்ற தாழ்வுகளுக்கு மணிவண்ணன் சாட்டையடி கொடுத்தார்.

நேரடியான அரசியல் படங்கள் என்பதை தாண்டி தான் நடித்த மற்றும் இயக்கிய படங்களில் போகிற போக்கில் அவர் கூறும் அரசியல் வசனங்கள் பிரசித்தம்.

வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் முற்போக்கு கருத்துக்களையும் பகுத்தறிவு பார்வையையும் தன் வசனங்கள் மூலம் மணிவண்ணன் வெளிப்படுத்த தவறியதில்லை.

தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் மணிவண்ணன் பல படங்களில் அசத்தினார். சினிமாவை தாண்டிய களத்திலும் மணிவண்ணன் தொடர்ந்து இயங்கி வந்தார்.

படங்களோடு மட்டுமின்றி கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை தன் வாழ்விலும் தீவிரமாக பின்பற்றியவர் மணிவண்ணன்.

1953 இல் ஜூலை 31 பிறந்த மணிவண்ணன் 2013 ஜூன் 15 அன்று தனது 59வது வயதில் உடல்நலகுறைவால் மணிவண்ணன் காலமானார். அதே ஆண்டு அவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் 50 படமான அமைதிப்படை 2 வெளியானது.

தன் கடைசி மூச்சு வரை சினிமாவின் மூலம் மக்களை அரசியல்படுத்துவதில் மணிவண்ணன் தீர்க்கமாக செயல்பட்டார். அவரின் படங்கள் மற்றும் வசனங்கள் இன்றும் எங்கோ ஏதாவதொரு மூலையில் யாரையேனும் சிந்திக்க வைத்த வண்ணமே உள்ளது.