சினிமா செய்திகள்

மமிதா பைஜு புறக்கணிப்பா? சூர்யா பட போஸ்டர் விவகாரத்தில் சனம் செட்டி கண்டனம்!

இத்தகைய தவறான நிலை திரைத்துறையில் நிச்சயம் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரேமலு' திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மமிதா பைஜு மற்றும் நடிகர் சூர்யா இணைந்து நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால், இந்த பாடல் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ போஸ்டரில், கதாநாயகி மமிதா பைஜுவின் புகைப்படமோ அல்லது அவரது பெயரோ இடம் பெறவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நடிகை சனம் செட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் ஆக்ரோஷமாகப் பதிவிட்டு படக்குழுவினருக்கு எதிராகத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு படத்தின் போஸ்டரில் முதன்மை கதாநாயகியான மமிதா பைஜுவின் பெயரையோ, அவரது புகைப்படத்தையோ சேர்ப்பதைத் தடுப்பது எது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்,

அந்த போஸ்டரில் அவரது பெயரைத் தவிர மற்ற அனைவரின் பெயர்களும் வரிசையாக இடம் பெற்றுள்ள நிலையில் இது எந்த விதத்தில் நியாயமாகும் என்று சாடியுள்ளார். மேலும், இத்தகைய தவறான நிலை திரைத்துறையில் நிச்சயம் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு கதையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும்போது, படத்தின் விளம்பர போஸ்டர்களிலும் அவரது பெயர் இடம்பெறுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ள சனம் செட்டி, சினிமா என்பது காலம் மாற மாற நம்முடன் சேர்ந்துதான் பரிணமிக்கிறது என்றும், இது வெறும் விளம்பரம் சார்ந்தது மட்டுமல்லாமல் திரைத்துறையில் பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சமத்துவம் மற்றும் மரியாதை பற்றியது என்றும் தனது பதிவில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

கதாநாயகி புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் சனம் செட்டி தட்டிப்பறித்துக் கேட்டிருப்பது தற்போது கோலிவுட் வட்டாரத்திலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT