பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே நாயர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி. திரையுலகில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் கே நாயர் அதன் பின்னர் வில்லன், நகைச்சுவை நடிகர் என பல வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இந்த நிலையில், அவர் நேற்று தனது மனைவியுடன் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஈனாத்து பகுதி அருகே சென்றபோது, அவர்கள் சென்ற கார் மீது வேன் ஒன்று வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கி சந்தோஷ் கே.நாயர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மறைவு மலையாள திரையுலகம், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சந்தோஷ் கே நாயரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் மம்முட்டி பேஸ்புக்கில் வெளியிட்ட இரங்கல் பதிவில், "நாங்கள் இணைந்து பணியாற்றிய தருணங்களை அன்புடன் நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.
இந்த கடினமான நேரத்தில், அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் என் நினைவுகள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் மறைந்த நடிகர் சந்தோஷ் கே நாயருக்கு இரங்கல் தெரவித்து வருகின்றனர்.