சினிமா செய்திகள்

தியாகராஜன் குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கிய மாளவிகா மோகனன்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார்.

வெற்றிக் கூட்டணியின் மறுஇணைவு

'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாடர்ன் லவ் சென்னை' ஆகிய படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவரது இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், அப்படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்

தியாராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இயக்குநருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இளையராஜா விலகிய நிலையில், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

டப்பிங் அப்டேட் மற்றும் டீசர் தகவல்

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாகப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாளவிகா மோகனன் டப்பிங் பேசும் புகைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் டிராமா, நிறைய உணர்வுகள்" எனப் படத்தின் தன்மை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'பாக்கெட் நாவல்' டீசர் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டுத் தேதி

தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'பாக்கெட் நாவல்', வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT