சமகால அரசியலையும், அரசியலில் நடைபெறும் பிம்ப அரசியலையும் நையாண்டி செய்யும் விதமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மக்கள் தலைவா.
எந்த வேலையும் செய்யாமல், போலியான போராட்டங்கள் மூலம் வாழ்க்கையை நடத்தி வரும் ரவி மரியாவை, தனது அரசியல் திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் பெரும் செல்வந்தரான ராதாரவி.
முதலில் அவரை சினிமா ஹீரோவாக மாற்றும் அவர், பின்னர் அரசியல் கட்சியையும் தொடங்கி மக்கள் தலைவராக உருவாக்குகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற, ராதாரவியின் அரசியல் விளையாட்டு எந்த திசையில் செல்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ரவி மரியா, தனது கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். அரசியல் மேடை பேச்சு, நகைச்சுவை, உணர்ச்சிபூர்வமான காட்சிகள் என தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ராதாரவி வழக்கம்போல அனுபவமான நடிப்பால் கதைக்கு பலம் சேர்க்கிறார்.
பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, பேரரசு, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் ராம்தேவ், தற்போதைய அரசியல் மாற்றங்களையும், அரசியல் வியாபாரத்தின் மறுபக்கத்தையும் தைரியமாக பேச முயற்சித்திருக்கிறார். பல இடங்களில் அரசியல் நையாண்டிகள் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன. ஆனால் திரைக்கதையில் இன்னும் கூடுதல் விறுவிறுப்பும், அழுத்தமும் இருந்திருந்தால் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
சமகால அரசியலை நையாண்டியாக பேசும் முயற்சியில் கவனம் ஈர்த்தாலும், திரைக்கதை பலவீனத்தால் முழுமையாக மனதில் நிற்க தவறுகிறது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ்.நாயர் குறைந்த வசதிகளிலும் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
துளசிராமனின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவில் கைகொடுக்கின்றன.