லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'டிசி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் பாராட்டுக்களைப் பெற்று வரும் இப்படத்தை, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபு பார்த்துவிட்டு தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
படத்தைப் பார்த்த பிறகு மகேஷ் பாபு வெளியிட்ட பதிவில், "என்ன ஒரு அசல் மற்றும் அற்புதமான திரைப்படம்! மிகவும் கூலாக இருக்கிறது, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்துப்பார்த்தேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகேஷ் பாபுவின் பாராட்டுக்குச் சில மணி நேரங்களிலேயே இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்து தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன், "மிக்க நன்றி சார்! நீங்கள் படத்தைப் பார்த்து பாராட்டியது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
உங்கள் அன்பிற்கும் இனிய வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இப்படத்திற்கு இசையமைத்து பலதரப்பட்ட பாராட்டுக்களைப் பெற்று வரும் அனிருத்தும் மகேஷ் பாபுவிற்கு தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள 'டிசி' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிதா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல் துறையின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் 'தேவதாஸ்' என்ற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். வெளியான பத்து நாட்களுக்குள்ளேயே 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, 100 கோடி ரூபாய் இலக்கை நோக்கி இப்படம் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.