நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
நிதிப்பிரச்சனை தொடர்பாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி, பிரேம்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், படத்தை வெளியிட, 2023-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 15-ந்தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதி அளித்து, கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி ஐகோர்ட்டை நாடலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, புண்ணியமூர்த்தி, பிரேம்குமார் ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த
நீதிபதிகள் பி.வேல்முருகன், திலகவதி ஆகியோர் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூலை 15-ந்தேதி வரை நீட்டிக்கக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இந்த மனுவுக்கு வருகிற17-ந்தேதி உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தார்.