இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதல் என்பது நேரில் சந்தித்து மலர்வதை விட, டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என தொடங்குகிறது.
இந்த நவீன காதல் மற்றும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் சீரிஸ் தான் '#Love'.
இந்த தொடர் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மட்டும் வெளியாக உள்ளது.
பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் இந்த தொடரை இயக்கியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
May6 Entertainment Factory நிறுவனம் இதை தயாரித்துள்ளது. திரைக்கதையை நிர்மல் வில்லியம்ஸ் எழுத, ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி தான் தொடரின் பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
FOUND மற்றும் Find My Bae என்ற இரண்டு பிரபல டேட்டிங் ஆப்களை சுற்றி கதை நகர்கிறது. இந்த ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, மற்றவர்களுக்கு சரியான துணையை தேடிக் கொடுப்பதில் வல்லவர்கள்.
ஆனால் தங்களுக்கான காதலை தேடுவதில் தோற்றுப் போகிறார்கள். இவர்கள் போட்டியாளர்களாக சந்திக்கும் போது உருவாகும் காதல், மோதல், நட்பு, குடும்ப உறவுகள் என அனைத்தையும் நகைச்சுவையுடன் சொல்லும் தொடராக இது உருவாகியுள்ளது.
இதுகுறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறுகையில், "இந்தியாவில் தென்னிந்திய கதைகளுக்கான முதலீட்டை அதிகரித்து வருகிறோம்.
இன்றைய தலைமுறையினரின் காதலை பிரதிபலிக்கும் கதை இது. அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யாவின் இயல்பான நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துள்ளது" என்றார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், "உறவுகளின் மாற்றத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதை. பாலாஜி உருவாக்கிய கதாபாத்திரங்கள் குறைகளுடன் இருப்பதால் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் ஆவார்கள்" என்றார்.
இயக்குனர் பாலாஜி மோகன் கூறுகையில், "காதல் மாறியிருக்கிறது, சந்திக்கும் முறை மாறியிருக்கிறது, ஆனால் உணர்வுகள் மாறவில்லை. அதை தான் இந்த தொடரில் சொல்லியிருக்கிறோம்" என்றார்.
காதலில் முக்கியம் கெமிஸ்ட்ரியா? கம்ஃபோர்ட்டா? என்ற கேள்விக்கான பதிலை அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் காணலாம் என்று தெரிவித்துள்ளனர்.