சினிமா செய்திகள்

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் லீடர் படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு..!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லீடர் திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லீடர் திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

லெஜெண்ட் சரவணன் பேசுகையில், "இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி. இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

லெஜெண்ட் படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் லீடர். இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது. அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும். இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.

இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன. அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன். ஒன்றுதான் என்றார்.

உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம். அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது.

என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.

இந்த திரைப்படம் ஜெயிலர் போன்றோ அல்லது விக்ரம் போன்றோ, 'லியோ போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் லீடர் படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது. குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.

இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை லீடர் உடன் கொண்டாடுங்கள்.

"கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை. எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாகதான் நடக்கும். நாம அவங்களதான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க" என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்," என்றார்.

லீடர் திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, 'லீடர் உருவாகியுள்ளது.

இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.