சினிமா செய்திகள்

லட்சுமி காந்தன் கொலை வழக்கு- திரை விமர்சனம்

மரண தண்டனை, நீதி, மனிதநேயம் குறித்து ஆழமான விவாதத்தை தூண்டும் சமூக அக்கறை கொண்ட படமாக வெளிவந்துள்ளது.

Maalaimalar

கதை

1970-களில் தமிழக கிராமப் பின்னணியில் தொடங்கும் கதை.

படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழும் லிசி ஆண்டனி மகன் வெற்றி, அவரது நண்பர் மாறனுடன் சேர்ந்து சிறு திருட்டுகளை செய்து வாழ்க்கையை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் சூழ்நிலை அவரை கொலை செய்யும் அளவுக்கு தள்ளுகிறது.

கடன் கொடுத்த கவிதா பாரதியை கொலை செய்த குற்றத்திற்காக அவருக்குதூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய இரவில், நீதிபதி, மருத்துவர், சிறை அதிகாரி ஆகியோர் வெற்றியை சந்திக்கிறார்கள். அப்போது “தூக்கிலிடுவதும் அரசே செய்யும் ஒரு கொலைதான்” என்று வெற்றி முன்வைக்கும் வாதம் கதையை முழுவதுமாக வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இறுதியில் வெற்றிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா? அவரது வாதத்திற்கு சட்டம் என்ன பதில் சொல்கிறது? என்பதே படத்தின் மீதி கதை

நடிகர்கள்

வெற்றி தனது கதாபாத்திரத்தில் வேதனை, கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். லிசி ஆண்டனி, பிரிகிடா சாகா, கவிதா பாரதி, ‘பருத்திவீரன்’ சரவணன், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட அனைவரும் கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவு- இசை

எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு நீதிமன்ற அறை மற்றும் சிறைக் காட்சிகளின் உணர்வை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. தர்புகா சிவாவின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்துகிறது.

இயக்குநர்

இயக்குநர் தயாள் பத்மநாபன், “சட்டத்தின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; மனிதனை திருத்தி சமூகத்தில் மீண்டும் வாழ வைப்பதே” என்ற கருத்தை வலிமையாக முன்வைக்கிறார். நீதித்துறை, மனிதநேயம், மரண தண்டனை குறித்து பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் விதத்தில் திரைக்கதையை அமைத்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், கிளைமாக்சில் எழுப்பப்படும் கேள்விகள் மனதில் நீண்ட நேரம் நிற்கின்றன.

சமூக அக்கறை

மொத்தத்தில் “லட்சுமி காந்தன் கொலை வழக்கு” வெறும் கொலை வழக்கை பேசும் படம் அல்ல; மரண தண்டனை, நீதி, மனிதநேயம் குறித்து ஆழமான விவாதத்தை தூண்டும் சமூக அக்கறை கொண்ட படமாக வெளிவந்துள்ளது.

SCROLL FOR NEXT