தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பக்தி, வரலாறு, மற்றும் தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைக் களங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், 2026ஆம் ஆண்டில் வெளியாகி சாதித்த மற்றும் விரைவில் திரைக்கு வரவிருக்கும் முக்கியத் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்...
தெய்வீகத்தையும் நீதியையும் மையமாகக் கொண்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘கருப்பு’ படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் கடந்த மே மாதம் ‘கருப்பு’ வெளியானது. திரையரங்குகளில் மட்டுமல்லாது ஓ.டி.டி. தளத்திலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ‘கருப்பு’ இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக திகழ்கிறது.
2020ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்தார். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி. இயக்குகிறார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் 'மூக்குத்தி அம்மன்' கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த அம்மன் வேடத்திற்காக அவர் ஒரு மாதம் விரதம் இருந்து நடித்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ‘மூக்குத்தி அம்மன்2’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘சேயோன்’. சிவக்குமார் முருகேசன் இயக்கும் இத்திரைப்படம், மதுரையை பின்னணியாகக் கொண்ட கிராமத்து ஆன்மீக ஆக்ஷன் கதையாக உருவாகி வருகிறது. கையில் வாள் ஏந்தி, மயில்கள் சூழ சிவகார்த்திகேயன் மிரட்டலாக இருக்கும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இப்படத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாத பண்டிகைக் காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் மாபெரும் கூட்டணியான இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் ‘தமிழ் முருகன்’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அறிவுமதி கதை எழுத, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 'தமிழ் கடவுள்' என்று போற்றப்படும் முருகனின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இத்திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதில் தனுஷ் கையில் வேல் ஏந்தி, யானை மீது கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.