மத்திய உள்துறை அமைச்சகம், தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கு செவ்வாய்க்கிழமை முதல் 'கேரளம்' எனப் புதிய பெயரை அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அரசிதழ் அறிவிப்பில், உள்துறை அமைச்சகம், “கேரளா (பெயர் மாற்றம்) சட்டம், 2026-இன் பிரிவு 1-இன் துணை பிரிவு (2) வழங்கிய அதிகாரங்களை பயன்படுத்தி, மத்திய அரசு, ஆகஸ்ட் 25, 2026-ஐ, மேற்கூறிய சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும் தேதியாக இதன்மூலம் நியமிக்கிறது” என்று கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், கேரளாவை கேரளம் என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து, அந்த சட்டத்தை ஒரு சட்டமாக மாற்றினார்.
ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று மக்களவை கேரள (பெயர் மாற்றம்) மசோதாவை நிறைவேற்றியது, அதனை தொடர்ந்து மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான சட்டத்தை கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டமன்றம் 2024-ஆம் ஆண்டில் ஒரு தர்மானத்தை நிறைவேற்றியதாக கூறினார்.
"இந்த மசோதாவின்படி, கேரள மாநிலம் 'கேரளம்' என அழைக்கப்படும். எனவே, கேரளா என்பதை 'கேரளம்' என பெயர் மாற்றும் திட்டம் உள்ளது," என்று அவர் கூறினார். பெயர் மாற்றம் தொடர்பாக மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, கேரள அரசு 2024 ஜூன் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது.
அதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அந்த மசோதாவை மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களுக்காக பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து, சட்டமன்றம் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
கேரள (பெயர் மாற்ற) சட்டம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் அதன் விளைவான விதிகளில் தேவையான திருத்தங்களை செய்து, மாநிலத்தின் பெயரை மாற்றுகிறது.