சினிமா செய்திகள்

கவினின் 10-வது படம்: 'பேர் சொல்லும் பிள்ளை' படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடக்கம்!

கவின் - சஞ்சனா கூட்டணி எப்படி இருக்க போகிறது என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான கவினின் 10- வது திரைப்படம் 'பேர் சொல்லும் பிள்ளை' இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைப்புக்கு பின்னால் இருக்கும் சுவாரசியம்

1987-ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கிளாசிக் திரைப்படமான 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் தலைப்பு, இந்த புதிய படத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது.

பழைய படத்தின் டைட்டிலாக இருந்தாலும், இது முற்றிலும் தற்காலத்திற்கு ஏற்ற ஒரு புதிய மற்றும் சுவாரசியமான கிராமத்துக் கதைக் களம் கொண்ட திரைப்படம் என படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இத்திரைப்படத்தின் மேல் இருக்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு

கடந்த ஜூன் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, சென்னை மற்றும் செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் கவின் மற்றும் சஞ்சனா சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், அடுத்த முக்கியக் கட்டமாக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த வாரம் முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்

'பேர் சொல்லும் பிள்ளை' திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'லப்பர் பந்து' திரைப்படப் புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தை 'தண்டட்டி' படத்தை இயக்கிய ராம் சங்கையா கதையை எழுதி இயக்க, பிரின்ஸ் பிக்ஸர்ஸ் சார்பில் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.

ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவையும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பையும், G. மதன் படத்தொகுப்பையும், M. கதிரவன் மதி கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

எதிர்பார்ப்பு

’டாடா’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடித்த 'ஹாய்' (Hi) திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பால் மக்களின் பேராதரவையும் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அண்மையில் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தங்களின் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்து வரும் இவர்கள் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பதால், திரையில் இவர்களது புதிய காம்போ மற்றும் புதிய கெமிஸ்ட்ரி எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே தற்போதே பலமடங்கு அதிகரித்து இவர்களது கூட்டணி மீதான எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டியுள்ளது.