கேரளாவிலிருந்து தனது மகளின் சிகிச்சைக்காக நகைகளுடன் சென்னை வரும் இந்திரன்ஸ், பேசின் பிரிட்ஜ் பகுதியில் வழிப்பறி கும்பலிடம் சிக்கி தன் நகைகளை இழக்கிறார். காவல்துறை நடவடிக்கையால் சில நகைகள் மீட்கப்பட்டாலும், அதை நீதிமன்றம் மூலமாக தான் பெற முடியும் என கூறப்படுகிறது. இதனால், வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது.
அங்கு பணம், அதிகாரம், செல்வாக்கு என சட்டத்தை தங்களது வசமாக மாற்றி விளையாடும் வக்கீலாக வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த சூழலில், திடீரென வழக்கறிஞர் சரவணனாக களமிறங்கும் சூர்யா, அந்த குடும்பத்திற்காக போராட தொடங்குகிறார். சாதாரண மனிதராக தெரியும் அவரிடம் ஒரு தெய்வீக சக்தியும் இருப்பது தெரிய வர, அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே ‘கருப்பு’ படத்தின் மீதிக்கதை.
வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் மற்றும் திறமை இரண்டையும் இணைத்து ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக தாடி தோற்றம், மிடுக்கான உடல் மொழி, கோர்ட் சீன்களில் பேசும் வசனம் என அனைத்திலும் கம்பீரமாக இருக்கிறார். கருப்பசாமி அவதாரத்தில் கையில் அரிவாளுடன் வரும் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் திரிஷா, அளவான மற்றும் எளிமையான நடிப்பின் மூலம் கதைக்கு தேவையான பலத்தை கொடுத்திருக்கிறார். சூர்யாவுடன் வரும் சென்டிமென்ட் மற்றும் கோர்ட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
எதிர்மறை நிழல் படிந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, வக்கீலாக சில இடங்களில் முழு வில்லனாகவே மிரட்டுகிறார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளில் அவரது உடல் மொழி மற்றும் டைமிங் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது.
ஆணவம் கொண்ட நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தத்தை சரியாக கொடுத்திருக்கிறார். சில கோர்ட் காட்சிகளில் வரும் அவரின் முகபாவனை மற்றும் ஆர்.ஜே.பாலாஜி உடன் வரும் காட்சி அரங்கில் சிரிப்பையும் ஏற்படுத்துகிறது.
கேரளாவிலிருந்து வரும் வயதான தந்தையாக நடித்திருக்கும் இந்திரன்ஸ், மிக உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகளின் நிலையை எண்ணி தவிக்கும் காட்சிகள் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது. அவரது மகளாக நடித்திருப்பவர் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு சட்டப் போராட்ட கதைக்குள் கருப்பசாமி என்ற தெய்வ நம்பிக்கையை இணைத்து, அதை முழுக்க பக்தி படமாகவோ அல்லது ஃபேண்டஸி படமாகவோ மாற்றாமல் கமர்ஷியல் டிராமாவாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, பல இடங்களில் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறார். ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில சினிமாத்தனம் மற்றும் லாஜிக் மீறல்கள் தெரிகிறது. இருந்தாலும், சூர்யாவின் திரை இருப்பு, கோர்ட் டிராமா மற்றும் கருப்பசாமி காட்சிகள் ஆகியவை படத்தை தாங்கிச் செல்கிறது.
சாய் அபயங்காரின் இசையில் பின்னணி இசை மற்றும் கருப்பசாமி பாடல் இரண்டும் பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக மாஸ் காட்சிகளில் பின்னணி இசை ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு, நீதிமன்ற காட்சிகளையும், ஆன்மீக தருணங்களையும் அழகாக பதிவு செய்துள்ளது.