சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்பராஜின் அடுத்த மெகா பிளான்: அதர்வா படத்தில் இணையும் உபேந்திரா!

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தடுத்து இரண்டு முக்கிய திரைப்படங்களை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் புதுமுகங்களை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டு, மதுரையை பின்னணியாகக் கொண்ட ஒரு 'இண்டிபெண்டன்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்துள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படம் முதலில் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு, பின்னரே திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்த முழுநீள கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இதில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்காக அவர் தீவிரமான நடனம் மற்றும் சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ரியல் ஸ்டார்' உபேந்திரா இத்திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் சொந்த நிறுவனமான 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.