ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "நீளிரா." இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் 'நீளிரா' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது, "முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம்.
இந்தப் படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர். அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் ஏராளமான கதைகள் உள்ளது.
எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் 'காட்சி பிழை' தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.
போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும். தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது.
இந்த சூழலில் போர் நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தினை ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,'' என்றார்.