பொதுவாக தமிழ் சினிமாவில் அரசியல் கதைகள் என்றாலே அதிரடி, சவால், பஞ்ச் வசனங்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும்.
‘டாடா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’. தீவிரமான அரசியல் பின்னணியைக் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் முதன்மை பாத்திரமேற்று நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைரலான நிலையில், படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் தங்களது இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக தமிழ் சினிமாவில் அரசியல் கதைகள் என்றாலே அதிரடி, சவால், பஞ்ச் வசனங்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால், ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஒரு எம்.எல்.ஏ-வின் தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கும் குடும்பத்திற்குமான உறவுமுறை மற்றும் அவரது எமோஷனல் பக்கத்தைப் பேசும் எதார்த்தமான அரசியல் த்ரில்லராக உருவாகி வருவதாக இயக்குநர் கணேஷ் கே பாபு தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் நாசர், கே.எஸ்.ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் டாவ்டி எஸ்.ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு உணர்ச்சிப் பூர்வமாக தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 'சில கனவுகள் நனவாக பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் இன்று என் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. ரவி மோகனுடன் பணியாற்ற வேண்டும் என்பது தனது நெடுநாள் விருப்பம் என்றும் அவருடன் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியையும்ட, பெருமையையும் அளிப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.