சினிமா செய்திகள்

'கர' - திரைவிமர்சனம்

தனுஷ், வங்கியை கொள்ளை அடித்தாரா? நிலத்தை மீட்டாரா? தந்தை உடலை அடக்கம் செய்தாரா? போலீசிடம் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மாலை மலர்

கதை

திருவெறும்பூர் பகுதியில் இருக்கும் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க செல்கிறார் நாயகன் தனுஷ். இவருடன் மைத்துனர் பிரித்வி பாண்டியராஜ் செல்கிறார். தன்னுடைய கடைசி திருட்டு என்று முடிவு செய்து கொள்ளை அடிக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக தனுஷ் சிக்கி கொள்ள, பிரித்வி பாண்டியராஜ் தப்பித்து விடுகிறார்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுராஜ், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு, தனுஷை பல வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

இதையறிந்த தனுஷ், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து செல்கிறார். 6 மாதங்கள் கழித்து ரேணிகுண்டாவில் திருட்டை விட்டு, மனைவி மமிதா உடன் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு செல்கிறார். அங்கு தந்தை கே.எஸ்.ரவிக்குமார் வைத்திருக்கும் நிலத்தை விற்று பணம் கேட்கிறார்.

ஆனால், நிலம், வங்கியில் அடமானத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். மேலும் வங்கி கடன் கட்டமுடியாமல் ஜப்தி செய்ய நோட்டீஸ் வருகிறது. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் இறந்து விடுகிறார். அவரது சடலத்தை வங்கி அதிகாரிகள் அடக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். நிலத்தை மீட்க வங்கியை கொள்ளை அடிக்க முடிவு செய்கிறார்.

இறுதியில் தனுஷ், வங்கியை கொள்ளை அடித்தாரா? நிலத்தை மீட்டாரா? தந்தை உடலை அடக்கம் செய்தாரா? போலீசிடம் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், அசுரதனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன், காதல், தந்தை பாசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

குறிப்பாக தந்தை சென்டிமென்ட்டில் கண்கலங்க வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ எதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

தந்தையாக நடித்து இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிந்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் மிரட்டலான நடிப்பால் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

வங்கி அதிகாரி ஜெயராம், மாமா கருணாஸ், பிரித்வி பாண்டியராஜ் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இயக்கம்

வங்கி கொள்ளை, விவசாய நிலம் மீட்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இருக்கிறார். வங்கி ஊழியர்களின் செயல், பொது மக்களின் அவலநிலை ஆகியவற்றை பேசி இருக்கிறார். வங்கி லோன், மாத தவணை, ஆகியவற்றில் மக்கள் படும் அவதி ஆகியவற்றை தைரியமாக சொல்லி இருக்கிறார்.

இசை

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கதையோடு பயணித்து இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.