சினிமா செய்திகள்

Kara | "கர" வெளியீட்டை ஒட்டி ரசிகர்களுக்கு இயக்குநர் விடுத்த கோரிக்கை

கர திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கர". வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷூடன் ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி இயக்குநர் விக்னேஷ் ராஜா ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், "கரவின் பயணம் பல வழிகளில் சிறப்பானது. கர நாளை (இன்று) உலகெங்கும் வெளியாகிறது. நீங்கள் அதை திரையரங்குகளில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தால், மற்றவர்களுக்கு கதையை சொல்லி கெடுக்காமல், இதைப் பற்றி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். திரையரங்குகளில் சந்திப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.