சினிமா செய்திகள்

காந்தாரா சர்ச்சை - உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்த ரன்வீர் சிங்!

4 வாரங்களுக்கு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்ல கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மைசூர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்து, தனது மன்னிப்பைச் செலுத்தியுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'காந்தாரா' திரைப்படத்தைப் பாராட்டி ரன்வீர் சிங் பேசினார். அப்போது, படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் உடலில் பெண் தெய்வம் இறங்கும் காட்சியை, மேடையில் நடித்துக் காட்டினார்.

அவரது நடித்தே காட்டியிருந்தார். ஆனால் அது அந்தப் பெண்கடவுளை கேலிசெய்யும் விதமாக அமைந்ததாகவும், இதனால் தங்களது மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகவும் கூறி, இந்து அமைப்புகள் மற்றும் சிலர் தரப்பில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராகக் காவல் நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரி ரன்வீர் சிங் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனிடையே இந்த சர்ச்சை தொடர்பாக மன்னிப்பும் கோரினார். அனைவருடைய மத நம்பிக்கைகளையும் நான் மதிப்பவன் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தள்ளுபடி செய்தது.

இருப்பினும், மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், 4 வாரங்களுக்குள் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவிற்கிணங்க இன்று சாமுண்டீஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

எவ்வித வி.ஐ.பி சலுகைகளும் இன்றி, ஒரு சாதாரணப் பக்தரைப் போலப் பொது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.