சினிமா செய்திகள்

வடிவுடையான் இயக்கத்தில் 12 மொழிகளில் உருவாகும் 'காக்கி முருகன்': உலகெங்கும் வெளியிடுகிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்!

விஜய் சத்யா அதிரடி போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக ரித்திகா சென் கதாநாயகியாக நடிக்கிறார்.

பொட்டு', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'பாம்பாட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வடிவுடையான். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கி, தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட திரைப்படம் 'காக்கி முருகன்'. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகெங்கும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

நூறு படங்களைத் தயாரித்து, 150-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், 'காக்கி முருகன்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி உலகின் முன்னணி 12 மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படத்தை உலகெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

வித்தியாசமான கதைக்களம்

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத வகையில், விலங்குகளை மையப்படுத்திய அதிரடி திரில்லராக இப்படம் உருவாகிறது. ஒரு முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிக்கும், உலகெங்கும் தடை செய்யப்பட்ட 5 வெறிபிடித்த பிட்புல் நாய்களுக்கும், முருகக் கடவுளுக்கும் இடையிலான மர்ம முடிச்சுகளால் பின்னப்பட்ட விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாகும் இப்படத்திற்காக, இதில் நடிக்கும் ஐந்து ராட்சச பிட்புல் நாய்களுக்கும் சர்வதேச தரத்திலான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஸ்ரீ வடிவுடையான் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வி. உமாராணி இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், விஜய் சத்யா அதிரடி போலீஸ் அதிகாரியாகக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சென் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு ஆர். பிரணவ் ஒளிப்பதிவு செய்ய, பிஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பையும், சண்முகம் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். யுகபாரதி பாடல்களை எழுத, ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சியையும், தினேஷ் நடன இயக்கத்தையும், ஜி. சங்கர் தயாரிப்பு மேற்பார்வையையும் மேற்கொள்கின்றனர்.

SCROLL FOR NEXT