சினிமா செய்திகள்

நண்பா நண்பீகளே விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்! 'ஜனநாயகன்' படக்குழுவின் அதிரடி அப்டேட்!

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருந்த இப்படம், தணிக்கை தாமதங்களால் தள்ளிப்போனது.

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான சி.ஜோசப் விஜயின் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது.

கடந்த ஏழு மாதங்களாக நீடித்த தணிக்கை விவாதங்கள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் அண்மையில் இணையத்தில் வெளியான படக்கசிவு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, தற்போது இப்படம் வரும் 24, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில், பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.300 முதல் ரூ.500 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

தணிக்கை வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, இப்படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) ஆகும். விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மத்திய தணிக்கைக் குழுவின் பெங்களூரு பிராந்திய அலுவலகம், படத்தில் சில அரசியல் மற்றும் வன்முறை சார்ந்த காட்சிகளுக்கு 12 மாற்றங்களை பரிந்துரைத்த பின்னரே இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.

குறிப்பாக, விஜயின் 'தமிழக வெற்றி கழகம்' கட்சி தொடர்பான மறைமுகக் குறியீடுகள் வசனங்கள், சில அரசியல் ரீதியான உரையாடல்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் மியூட் அல்லது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் விஜயின் திரைப்பயணத்தின் கடைசிப் படமாக கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருந்த இப்படம், தணிக்கை தாமதங்களால் தள்ளிப்போனது.

இடையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் இந்த 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் மிக பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படலாம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.