சினிமா செய்திகள்

முதன்முறையாக ஜோடி சேரும் ஜெயராம் - சிம்ரன்: பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

ரொமாண்டிக்-காமெடி கதைகளத்தைக் கொண்ட திரைப்படமாக இது உருவாகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ஜெயராம் மற்றும் சிம்ரன், புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தை ஜோதிகா நடித்த 'ராட்சசி' மற்றும் அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் எஸ்.ஒய். கௌதம்ராஜ் இயக்குகிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி

கடந்த 2002 ஆம் ஆண்டு கமல் ஹாசன் மற்றும் கே.எஸ். ரவிகுமார் கூட்டணியில் வெளியான 'பஞ்சதந்திரம்' திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இருப்பினும், அவர்கள் இருவரும் ஜோடியாக, முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் இவர்களின் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திர பட்டாளம் மற்றும் தயாரிப்பு விவரம்

ஜெயராம் - சிம்ரன் இணையும் புதிய திரைப்படத்தில் 'வாழை' பொன்வேல், தேவிகா சதீஷ் மற்றும் பகவதி பெருமாள் (பக்ஸ்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இத்திரைப்படத்தை ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி மற்றும் ரிலாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷான்ஜன் ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிரபல நடிகர் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனமும் இப்படத்தை வழங்குகிறது.

90s கிட்ஸ் vs 2k கிட்ஸ்

முழுக்க முழுக்க ரொமாண்டிக்-காமெடி கதைகளத்தைக் கொண்ட திரைப்படமாக இது உருவாகிறது. '90ஸ் தலைமுறை' மற்றும் இன்றைய '2கே (Gen Z) தலைமுறைக்கு' இடையே உள்ள உறவுமுறைகள், அவர்களுக்குள் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் நகைச்சுவையான மோதல்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இப்படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்க, அருள் இ. சித்தார்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

வெற்றி படங்கள்

நடிகர் ஜெயராம் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே 'கர', 'பரிமளா அண்ட் கோ', மற்றும் 'ஜிடிஎன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், கடந்த 2025 ஆம் ஆண்டு சசிகுமாருக்கு ஜோடியாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சிம்ரன், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'தர்மன்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.