சினிமா செய்திகள்

ஜெயிலர் 2- திரைவிமர்சனம்

அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது.

சினிமா செய்திப்பிரிவு

கதை

ஜெயிலர் 2 சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் சும்மா இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற மீண்டும் களமிறங்கும் ரஜினியின் அதிரடி ஆட்டம்தான் இந்த ‘ஜெயிலர் 2’!

தனது குடும்பத்தையே கொலை செய்யத் துணிந்த விநாயகனை ரஜினிகாந்த் தீர்த்துக்கட்டுவதுடன் முடிவடைந்தது முதல் பாகம். ஆனால், இறப்பதற்கு முன்பு, “என்னை முடித்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்காதே... எனக்குப் பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க்கே இருக்கிறது!” என்று விநாயகன் விடுத்த எச்சரிக்கையிலிருந்தே இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.

விநாயகனை வீழ்த்திய பிறகு குடும்பத்துடன் கோவையில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். ஆனால், விநாயகனின் மரணத்துக்குப் பழிவாங்கத் துடிக்கிறார் சுரேஷ் வெஞ்சரமூடு.

இதற்கிடையே, எதிரிகளின் கூடாரத்துக்குள் புகுந்து அவர்களின் சதித்திட்டங்களை அறிய முயற்சி செய்கிறார் ரஜினிகாந்த். அந்தக் கூட்டத்தையே பின்னணியில் இருந்து இயக்கும் எஸ்.ஜே. சூர்யாவை நெருங்குவதும் அவரது முக்கிய நோக்கமாக இருக்கிறது.

ஒருபுறம் எதிரிகளின் சதிவலை; மறுபுறம் ஆபத்தில் சிக்கும் குடும்பம்! மீண்டும் ரஜினியின் குடும்பத்தைக் குறிவைத்து ஒரு கும்பல் களமிறங்குகிறது.

இந்த சதிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? எஸ்.ஜே. சூர்யாவை ரஜினி நெருங்கினாரா? இல்லையா? விநாயகனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் என்னவாயின? எதிரிகளின் பிடியில் சிக்காமல் குடும்பத்தை ரஜினி காப்பாற்றினாரா? என்பது கேள்விகளுக்கு அதிரடி திருப்பங்களுடன் விடை சொல்வதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்

76 வயதிலும் தனது வசீகரம், ஆளுமை மற்றும் ஸ்டைல் ​​மூலம் திரையை ஆக்கிரமிக்கிறார் ரஜினிகாந்த். 'முத்துவேல் பாண்டியன்' கதாபாத்திரத்தில் மீண்டும் களமிறங்கியுள்ள அவர், 'பாட்ஷா' பாணியிலான அந்த மேஜிக்கை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

ரஜினிக்கு அடுத்தபடியாக ஆர்ப்பரிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பு சிறப்பு.

ரம்யா கிருஷ்ணனின் அழுத்தமான நடிப்பு படத்துக்கு வலு கூட்டுகிறது. மிர்னா மேனனும் கவனிக்க வைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் வித்யா பாலன் தூள் கிளப்பி விட்டார். ஒரு பாடலுக்கு நடனமாடும் பூர்ணாவும் கவனிக்க வைக்கிறார்.

யோகி பாபு, நமோ நாராயணன் உள்ளிட்டோரின் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

இயக்கம்

'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக, அதே பாணியில், முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே கதை தொடங்குகிறது. இயக்குநர் நெல்சன், ஒரு சாதாரண குடும்பத் தலைவன் என்ற பிம்பத்திற்குள் கதையை நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார்.

இதில், குடும்ப உறவு சார்ந்த தருணங்கள், மாஸ்' காட்சிகள் மற்றும் கலகலப்பான நகைச்சுவை என அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. அதன் பிறகு வரும் ஒரு பிரம்மாண்டமான 'எலிவேஷன்' காட்சி, படத்திற்கு முழு வேகத்தைக் கொடுக்கிறது.

நெல்சனின் பலமான நகைச்சுவை அம்சம் இப்படத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நமோநாராயணன் மற்றும் யோகிபாபு கூட்டணியின் நகைச்சுவை காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. முதல் பாதியிலேயே மூன்று பிரம்மாண்டமான 'மாஸ்' காட்சிகள் மற்றும் அதிரடியான இடைவேளைக் காட்சி என படம் அதிரடியாக நகர்கிறது.

இரண்டாம் பாதி ரஜினிகாந்த் படங்களுக்கே உரித்தான பாணியில் பயணிக்கிறது. ஒரு மோதல், அதன் தொடர்ச்சியாக நாயகனின் கம்பேக், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் அதிரடியான 'மாஸ்' காட்சிகள் என படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. இவை ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் சிலிர்ப்பையும் தருகின்றன.

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தையும் பரபரப்பு, விறுவிறுப்பு குறையாமல் காட்சிப்படுத்தி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி.

சில குறைகள் இருந்தாலும், அதிரடி ஆக்‌ஷனையும் ரஜினியின் மாஸையும் ரசிப்பவர்களுக்கு ‘ஜெயிலர் 2’ நல்ல விருந்து.

இசை

அனிருத்தின் இசை படத்துக்கு இன்னொரு பலம். பின்னணி இசை ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு உற்சாகம் கூட்டுகிறது. பாடல்களும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன.

ஒளிப்பதிவு

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு அதிரடி காட்சிகளுக்கு பிரமாண்டம் சேர்க்கிறது. சண்டைக் காட்சிகளின் வேகத்தையும், திரையில் நிகழும் பரபரப்பையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

SCROLL FOR NEXT