மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தில், நடிகை எலிசபெத் ஓல்சன் மீண்டும் ‘ஸ்கார்லெட் விட்ச்’ கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘விஷன் குவெஸ்ட்’ வெப் சீரிஸின் முதல் சீசன் இறுதி எபிசோடில் இடம்பெற்றுள்ள போஸ்ட்-கிரெடிட் காட்சி இதற்கான வலுவான அடையாளத்தை கொடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான ‘விஷன் குவெஸ்ட்’ தொடரின் ‘Forever' எனும் இறுதி எபிசோடின் முடிவில், 2022-ல் வெளியான ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படத்தில் வாண்டா மாக்சிமோஃப் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகக் காட்டப்பட்ட வுண்டாகோர் மலைப் பகுதி மீண்டும் காட்டப்படுகிறது.
அந்த போஸ்ட்-கிரெடிட் காட்சியில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் தனது சக்தியால் வாண்டாவை மூடியிருந்த கற்களையும் இடிபாடுகளையும் அகற்றுகிறார்.
ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் வில்லன் கதாபாத்திரமான டாக்டர் டூம் போலத் தோற்றமளிக்கும் அந்த நபர், "ஸ்கார்லெட் விட்ச், எழுந்திரு. உனது சக்தி இனி என்னுடையது" எனக் கூறுவது போல் அந்தக் காட்சி அமைந்துள்ளது. இதன் மூலம் டாக்டர் டூமின் சதித்திட்டத்தில் வாண்டாவின் சக்தி முக்கியப் பங்கு வகிக்கப் போவது உறுதியாகியுள்ளது.
எலிசபெத் ஓல்சன் மீண்டும் நடிப்பது குறித்து மார்வெல் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், இந்தக் காட்சி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘எண்ட்கேம்’ படங்களை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூசோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர்.
வில்லனாக ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் ஸ்டீவ் ரோஜர்ஸாக கிறிஸ் எவன்ஸ் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளோரன்ஸ் பக், வனேசா கிர்பி, டாம் ஹிடில்ஸ்டன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
உலகம் முழுவதும் டிசம்பர் 18 அன்று வெளியாகும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, இந்திய ரசிகர்களுக்காக ஒரு நாள் முன்னதாகவே டிசம்பர் 17-ம் தேதி ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது