தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், தனது அடுத்தடுத்த திரைப்படங்களுக்காகப் பெரிய அளவில் சம்பளத்தைக் குறைக்க முன்வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு ஹாட் பஸ் உலா வந்து கொண்டிருக்கிறது. ரூ.150 கோடிக்கு இறங்கி வந்த 'AK' பின்னணி என்ன?
அஜித் குமார் தனது முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரூ.163 கோடி வரை சம்பளமாகப் பெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய சினிமா மார்க்கெட் நிலவரம் மற்றும் தயாரிப்பாளர்களின் நிதிச் சூழலைக் கருத்தில் கொண்டு, தனது அடுத்த படங்களுக்கான சம்பளத்தை ரூ.150 கோடியாகக் குறைக்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்த தொகையும் தற்போதைய சூழலில் அதிகம் எனப் தயாரிப்பாளர்கள் கருதுவதால் பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிக்கிறது. சமீபத்தில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான 'ஹோம்பாலே புரொடக்ஷன்ஸ்' மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இடையே ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்ந்தது. இதில், தற்போதைய சந்தை நிலவரத்தை சுட்டிக்காட்டி, அஜித்தின் படத்திற்கு அதிகபட்சமாக ரூ.90 கோடி மட்டுமே சம்பளமாகத் தர முடியும் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல், அஜித்தின் படத்தை வைத்து சினிமா தயாரிப்பில் களமிறங்க ஆசைப்பட்ட ஒரு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன அதிபரும் அஜித்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். அவரும் தற்போதைய பிசினஸ் ரிஸ்க்குகளைக் கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.110 கோடி வரை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளார்.
தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அஜித் அடுத்ததாக இரண்டு கமர்சியல் என்டர்டெய்னர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். அதில், ரூ.260 கோடி மதீப்பீட்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க அஜித்தின் உத்தேச சம்பளம் ரூ.150 கோடியும், ரூ.235 கோடி மதீப்பீட்டில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க அஜித்துக்கு ரூ.150 கோடியும் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
'குட் பேட் அக்லி' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் ஒரு முறை அஜித் இணைந்தால் அது வெறித்தனமான மாஸ் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், அஜித்திற்கு 'வீரம்', 'விஸ்வாசம்' எனப் பல குடும்பங்கள் ரசிக்கும் பிளாக்பஸ்டர்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவுடனும் மீண்டும் ஒரு படம் இணைந்தால் அது பாக்ஸ் ஆபீஸில் பெரிய சம்பவமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பள விஷயத்தில் அஜித்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது? எந்த தயாரிப்பு நிறுவனம் இந்த மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்க முன்வரப் போகிறது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.