ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 4 இல் வெளியான 'பெத்தி' திரைப்படம் குறித்து சமூக ஊடகங்களிலும் திரையுலகிலும் தற்போது ஒரு விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆச்சியம்மா என்ற கதாப்பாத்திரத்தில் மலை கிராமத்து பெண்ணாக நடித்துள்ள நடிகை ஜான்வி கபூர் கதைக்கு சற்றும் பொருந்தாத வகையில் தேவையின்றி அப்படத்தில் மிகையான கவர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாக பல தரப்பில் இருந்தும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இது பெண்களை ஒரு போகப் பொருளாக கருதும் சமூக போக்குக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இது பெத்தி படம் மீதான விமர்சனம் என்பதை தாண்டி பொதுவாகவே இந்திய சினிமாவில் இத்தகு போக்கு நிலவி வருகிறது.
குறிப்பாக கமர்ஷியல் படங்களில் ஐட்டம் சாங் என்ற பெயரில் கதைக்கு தேவையே இல்லாத கவர்ச்சி நடனம் வலிந்து திணிக்கப்படுவது, இந்தி, தெலுங்கு, தமிழ் என பாரபட்சமின்றி இந்திய சினிமாவில் புரைபோயோடிப்போயுள்ளது.
பெத்தி படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.236 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது, இத்தகு கவர்ச்சியை வரும் காலங்களில் பிற படங்களும் கையாள மேலும் தூண்டுதலாக அமையலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
கவர்ச்சி என்பது கலை சுதந்திரத்தின் கீழ் வரையறுக்கப்பட்டு பார்ப்பினும், கதைக்கு சற்றும் தேவையற்று அது முழுக்க முழுக்க பார்வையாளர்களை கவர்வதற்காக படத்தில் வலிந்து திணிக்கப்படும்போது விவாதத்துக்குள்ளாகிறது.
தயாரிப்பாளர்கள் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்காக பெண்கள் மீதான தவறான பிம்பம் கட்டமைப்பது சமூக மனத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சமூகவிலையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெத்தி விஷயத்தில், படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா மீதான விமர்சனம் என்பதை தாண்டி பலர் ஜான்வி கபூரை சாடி வருகின்றனர்.
ஆனால் ஜான்வி கபூரின் ஒப்பனை கலைஞர்களில் ஒருவர் கூறுகையில், "ஒரு நடிகை தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களுக்காக அவரைக் குறை சொல்வது எளிது, ஆனால் உண்மையான கதை வேறு. படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளின்போது ஜான்வி கபூர் அதுபோன்ற காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பினார்" என தெரிவித்துள்ளார்.