இந்தியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தற்போது தேசத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் இனி அமைதியை உணரவே முடியாது என்று தோன்றுவதாக கூறிய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘சேகர் டோனைட்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் இந்தியில் தான் நடித்த முன்னா பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து காட்டினார். இந்த முன்னா பாய் திரைப்படமானது தமிழில் ரீமேக்காகி, கமல்ஹாசன் நடிப்பில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆக வெளியாகியிருந்தது.
இந்த படம் சமூகத்தில் நிலவும் சில விஷயங்களை கிண்டல் செய்யும் வகையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் தத், தன்னை இந்திய பிரதமராக கற்பனை செய்துகொண்டு, தனது தனித்துவமான முன்னா பாய் பாணியில் மக்களிடம் ஐந்து நிமிடம் பேசினார்.
அப்போது அவர், “இந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். நம் நாட்டில் அந்த அமைதியை இப்போது உணர முடியவில்லை.
இந்தியர்கள் பெருந்தன்மை கொண்டவர்கள், விருந்தோம்பல் குணம் உடையவர்கள். நாம் நிறைய கொடுத்திருக்கிறோம், எப்போதும் அப்படியே இருக்க வேண்டும்.
அந்த நாட்கள் விரைவில் திரும்பி வர வேண்டும் என்று சிவ்-ஜியிடம் பிரார்த்திக்கிறேன்.
மேலும், நான் காந்திஜியை நம்புகிறேன். அவரிடம் இருந்த மூன்று குரங்குகளை பற்றி அனைவருக்கும் தெரியும். அது தீயவற்றை பார்க்காதே, தீயவற்றை கேட்காதே மற்றும் தீயவற்றை பேசாதே என்பதாகும்.
ஆனால் இன்றைய சூழலில் நான்காவதாக ஒரு குரங்கு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். யாராவது ஒருவர் தவறு செய்தால், அதை யார் சரி செய்வார்?” என்று அவர் கூறினார்.
இதையடுத்து தேசத்தில் இனி அமைதியை உணரவே முடியாது என சஞ்சய் தத் பேசிய கருத்து இணையத்தில் பரவி சர்ச்சையானது.
இந்த நிலையில் சஞ்சய் தத் தான் பேசிய கருத்துக்கு விளக்கமளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், “எந்தவொரு தனிநபர், சமூகம் அல்லது நிறுவனங்களின் உணர்வுகளை புண்படுத்துவதோ, அவமதிப்பதோ, எனது நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனது கருத்துகள், கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு உரையாடலின் பின்னணியில் கூறப்பட்டன.
அவற்றின் பின்னணியில் இருந்த நோக்கம், 'முன்னா பாய்' போன்ற திரைப்படங்களில் காணப்படும் நகைச்சுவை மற்றும் நையாண்டியை ஒத்திருந்தது.
குறிப்பாக, அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணம் ஆகிய செய்திகளை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'காந்திகிரி' என்ற கருத்தைப் போன்றது.
துரதிர்ஷ்டவசமாக, எனது வார்த்தைகள் அந்த நோக்கத்திலிருந்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டன” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.