இளையராஜா 
சினிமா செய்திகள்

VIDEO: அடி அண்ணாமலை லிங்கமும், சிலிர்க்க வைத்த வைப்ரேஷனும்: கிரிவலம் குறித்து இளையராஜா பகிர்ந்த ரகசியம்

1974-ல் நான் மூகாம்பிகை கோவிலுக்கு போகும் போது அந்த மூகாம்பிகை முற்றிலுமாக என்னை ஏற்றுக் கொண்டார். அவர் காட்டிய வழியில் நான் போய் கொண்டிருந்தேன்.

இளையராஜா எழுதி இசை அமைத்த பள்ளியெழுச்சி பாவை பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-

1980 முதல் கிரிவலம்

நான் 1980-ல் இருந்து பவுர்ணமி அன்று மலை சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

நான் மலை சுற்றுவதை பார்த்துதான் அந்த மலை சுற்றலே மக்களால் அதிகமாக பின்பற்றப்பட்டது என்று அண்ணாமலையில் இருக்கக் கூடிய அடியார்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் நடக்கும் போது பகவான் ரமணருக்கு சேவை செய்த குஞ்சு சுவாமிகளும், நானும் மட்டும் தான் நடந்து போவோம். அவர்தான் முதல் முதலில் என்னை கிரிவலம் அழைத்து சென்றார்.

1980-ல் தான் போனேன். காரணம் என்னவென்றால் 1974-ல் நான் மூகாம்பிகை கோவிலுக்கு போகும் போது அந்த மூகாம்பிகை முற்றிலுமாக என்னை ஏற்றுக் கொண்டார். அவர் காட்டிய வழியில் நான் போய் கொண்டிருந்தேன். எல்லாமே அவ கொடுத்ததுதான். கூப்பிட்டாள் உடனே வந்து நிற்பாள்.

வருண பகவான்

இப்ப நான் கூப்பிட்டேன்னா இங்கே வந்து நிற்பாள். அது சும்மா வெறும் வார்த்தை இல்லை. உங்களுக்கு நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா நான் உண்மையைதான் சொல்வேன். பகவான் பார்க்கறதுக்காக 1980 ஆசிரமத்துக்காக போறேன். போற நேரத்தில் குஞ்சு சுவாமிகள் இருக்காரு. அவரும் நானும் சேர்ந்து வாங்க கிரிபரதசனம் போய்ட்டு வரலாம் என்றார். கூடவே போயிட்டு இருந்தேன். போய் சுத்தி முடிச்சிட்டு வரோம் அந்த முடிக்கிற நேரத்துல மழை.. வருண பகவான் அப்படியே ஷவர் போடுறார். மழை இல்ல.. என்ன நீங்க பெரிய சித்தர் போல இருக்கே அப்படின்னாரு குஞ்சு சுவாமிகள். இல்ல... என்ன சாமி இப்படி சொல்றீங்க என்றேன். ஆமா நீ கிரிப்பிரதட்சணம் வந்த உடனே வருண பகவான் ஆசீர்வாதம் கொடுக்கறார் இல்லையா, நீங்க சித்தர்தான் அப்படின்னார். ஐயயோ அப்படி இல்ல நான். அந்த நேரத்துக்கு மழை வந்துருக்கு அவ்வளவுதான் என்றேன். அதன்பிறகு அடுத்த பவுர்ணமிக்கு போறோம் அப்பவும் மழை வருது.. அதே இடத்துல வருது.. பாத்தீங்களா நான் சொன்னேன் நீங்க சித்தர்தான்னு... இப்படி போய்ட்டே இருக்கற நேரத்துல பவுர்ணமிக்கு போறதை நான் வழக்கமாக கொண்டு விட்டேன்.

நான் திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைத்து விட்டால் செருப்பு போடுவதில்லை. நான் போற பாதை நார்மலானது கிடையாது. குஞ்சு சுவாமிகளோடு போன இரண்டு முறை மட்டும்தான் நார்மலான வழியில போனேன் 14 கிலோ மீட்டர் அது. அதன்பிறகு பகவான் எந்த வழி போவாங்க இல்ல காட்டு பாதையில நடப்பாங்க அப்படின்னா பகவான் மூணு வழியில போவாங்க என்றார். சரி பகவான் போகும் நடுப்பாதையை தேர்ந்தெடுத்தேன். நான் நடக்கிற பாதை கண்ணாடி உடைந்தது போல் கற்கள் இருக்கும். காலடி எடுத்து வைத்தால் குத்தும். 80-ல் இருந்து 20 வருடங்கள் நான் விடாமல் கிரிவலம் சென்று வருகிறேன்.

வைப்ரேஷன்

அடி அண்ணாமலையில போய் உட்கார சுத்தும் போது அடி அண்ணாமலையில் உட்காருவது வழக்கம். அங்கே அந்த நேரத்தில் நான்கு மணிக்கு நாங்கள் கிளம்பினால் நாலரை மணி ஐந்து மணிக்கு அங்க போவோம். அப்ப அந்த கோவில் திறந்திருக்காது. நாங்க போய் உள்ள போனா அந்த குருக்களை கூப்பிட்டுவிட்டு அப்புறம் கோவிலை திறக்க சொல்லி உள்ளே போய் உட்காருவோம். உள்ள போய் உட்கார்ந்தா லிங்கம் இருக்கும். நான் இருப்பேன். என் கூட வந்த ஆட்கள் இருப்பாங்க. அந்த ஆட்கள் வந்து வெளிய போயிடுவாங்க. நானும் இந்த வழியா இதே போல போய்க்கொண்டிருக்கும் போது ஒருநாள் நானும் அந்த லிங்கம் மட்டும் தனியாக இருக்கிறோம். அந்த இடத்துல பயங்கர வைப்ரேஷன் இருக்கும். நீங்க வேணா போய் பாருங்க உங்களுக்கே நல்லா ரொம்ப ஈசியா புலப்படும்.

அந்த லிங்கத்தை பார்த்துக்கிட்டே இருக்கேன், பார்த்துக்கிட்டே இருக்கேன்,அந்த லிங்கம் ஞானசம்பந்தர் பாடுனத கேட்டிருக்கோம்ல அப்படின்ன உடனே உடம்பெல்லாம் புல்லரிக்குது. அப்போ இந்த கல்லு இந்த தூணு, இந்த பாதைகள், சம்பந்தர் பாடுனத கேட்டு இருக்கோம். அப்பர் பாடுனத கேட்டு இருக்கோம். சுந்தரர் பாடுனத கேட்டு இருக்கோம். மாணிக்க வாசகர் பாடுனத கேட்டு இருக்கோம். அப்ப மாணிக்கவாசகர் அங்க உட்கார்ந்துதான் திருப்பாவையும், திருவம்பாவையும் எழுதினாரு. அப்படின்னு அந்த நந்தியை கும்பிட்டு அப்புறம் குருக்கள் வந்தாரு கற்பூரம் காட்டினாரு கும்பிட்டு வெளியில நடந்து வந்தா நடக்கும்பொழுது என்னுடைய காலடிகள் எடுத்து வைப்பதற்கு அந்த வைப்ரேஷன் வந்து என்னை போட்டு அமுக்குது. அதன்பிறகு மூன்று மாதம் கழித்து திடீர்னு ஒரு நாள் எழுந்து உட்காரும் பொழுதுதான் இந்த பாட கிடைத்த பரம்பொருளை பாடுதற்கு ஒருபரப்பு கிட்டியும் பாடி பயன் காண பல்மொழியால் ஏத்தாது பண்டை வினைதூற்று மூட கிடப்பயோ முத்தே முகில் மூடா மோன முழுநிலவே மூட மனமுடம் நீக்குவானே முன்மொழியால் பாடேலோர் என்பாவா என்கிற ஒரு வார்த்தை வருது. நான் எழுதுற தமிழா இது. எனக்கு நான் எழுதினதுங்குறீங்களா, நான் யோசிச்சதுங்கறீங்களா... நான் யோசிக்கல. அதுவா வந்தது. அவன் கொடுத்தது. அதை இங்கே வந்து சஞ்சய் சுப்பிரமணியன் பாட கிடைத்த பரம்பொருளை பாடி இங்க ரொம்ப அற்புதமாக அவங்க நடனத்தில வெளிக்கொண்டு வந்தாங்க. நம்ம பார்க்கறதுக்கே ரொம்ப தெய்வீகமா இருந்தது. ரொம்ப தெய்வீக கலை. இசை என்பது தெய்வீக கலை.

ஏன் என்னை பொறுத்தவரைக்கும்னு ஆன்மிகம்னு கேக்குறீங்க? உங்களுக்கும் சேர்த்துதான். ஏன் என்னை பொறுத்தவரையில் நான் ஒரு ஆளே இல்ல. ஆன்மீகம் என்று ஒன்னு தனியாக இல்லை. வாழ்க்கையே ஆன்மீகம் தான். நீங்க வாழ்றதும் ஆன்மீகம்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.