சினிமா செய்திகள்

எல்லாரையும் திருப்திபடுத்த விரும்பினால் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும்: ராமாயணா பாடல் விமர்சனத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்

ராமாயணா திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ராமாயணா திரைப்படத்தின் தங்கள் ரங் பாடல் வெளியாகி இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால் போய் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என ரகுமான் பதிலளித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள ராமாயணா ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாகம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் ராவண தந்தவ் பாடல் கடந்த வாரத்தில் வெளியானதை தொடர்ந்து, மற்றொரு பாடலான மங்கள் ராங் பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

மங்கள் ரங் பாடல்

மங்கள் ரங் பாடலானது ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை சித்திரிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் ஆகியோர் பாடியுள்ளனர்.

மங்கள் ரங் பாடலுக்கு குமார் விஸ்வாஸ் வரிகளை எழுதியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மங்கள் ரங் பாடல் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தனது இசை குறித்து எழுந்துள்ள விமர்சனத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளார்.

முதலில் நேரம் கொடுங்கள்

இதுகுறித்து சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றின் நேர்கானலுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில், தனது இசையை கேட்பவர்கள் முதலில் அதனை மதிப்பிடுவதற்கு முன்பு, அதற்கு நேரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நானே எனக்கு முதல் விமர்சகர், நான் செய்யும் எல்லாவற்றையும் நான் விரும்பி செய்கிறேன் என்பதல்ல.

நாங்கள் ஒரு விஷயத்தை ஒரே நாளில் முடிவு செய்வதில்லை. சில சமயங்களில் மாதக்கணக்கில் அதனுடன் வாழ்கிறோம். அதற்கென்று ஒரு சிந்தனை செயல்முறை இருக்கிறது.

சில மெட்டுகள் ஊறுகாயை போன்றன

சில சமயங்களில் நீங்கள் மானுடவியலையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில நேரங்களில், ஊறுகாயை போல ஒன்றை அதன் போக்கில் விடவேண்டும்.

சில மெட்டுகளை பொறுத்தவரை, அது பழமையாக ஆக ஆக, மேலும் சிறப்பாகிறது. ஆனால் மக்கள் சில சமயங்களில் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.

அவர்கள் முழு படத்தையும் பார்ப்பதில்லை, எனவே சில சமயங்களில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

படம் வெளியான பிறகு தான், நாம் இதனால் தான் இந்தவிதமான இசைகளை பயன்படுத்தினோம் என விமர்சகர்களுக்கு தெரியவரும்.

திருப்திபடுத்த ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும்

பொதுமக்களின் கருத்துக்கு ஒருவரால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே முக்கியத்துவம் கொடுக்க முடியும். ஒரு கட்டத்திற்கு பிறகு எல்லோரையும் திருப்திபடுத்த முயற்சி செய்வதை விட, அதிலிருந்து முன்னேறி செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறினார்.

இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் கருத்துகளை மேற்கோள் காட்டிய அவர், “நீங்கள் எல்லோரையும் திருப்திபடுத்த விரும்பினால், போய் ஐஸ்கிரீம் விற்கலாம்” என கூறினார்.

SCROLL FOR NEXT