சினிமா செய்திகள்

1000 முறைகூட விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்வேன்: விமர்சனங்களுக்கு ராஷ்மிகா மந்தனா பதிலடி!

திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணைக் காதலிக்கவே இல்லை என்றால், எதற்காக நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது யாராவது ஒருவர் காதலை வெளிப்படுத்துவதற்காகப் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்வதோ, முழங்காலில் மண்டியிட்டு மோதிரம் அணிவிப்பதோ அல்ல. அவையெல்லாம் வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமே.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து, நேர்காணலில் கலந்துகொண்ட ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்கள் காதல் உறவு குறித்துப் பேசும்போது ராஷ்மிகா காட்டிய ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் விஜய் தேவரகொண்டா காட்டவில்லை.

மேலும், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் அந்த விருப்பத்தைத் தினமும் 100 முறை ரஷ்மிகா சொல்லச் சொல்லி கேட்டதாகவும் கூறினார். இதனால், பெரும்பாலானவர்கள் ராஷ்மிகாதான் காதலைக் காட்டுகிறார்; விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த உறவில் நாட்டமில்லை என்பது தெரிகிறது எனப் பதிவிட்டனர். சமூக வலைதளங்களில் விஜய் தேவரகொண்டா மாதிரியான ஆள்கள் ஆபத்தானவர்கள் என்கிற ரீதியில் விவாதங்களும் எழுந்தன. இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா அறிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இணையத்தில் இருக்கும் என் அன்பானவர்களே, ஆழமாகக் காதலிப்பவர்களுக்கும் எப்போதும் கசப்புணர்வுடனேயே இருப்பவர்களுக்கும்… என்னையும் விஜ்ஜுவையும் பற்றிய இந்த விவகாரத்தில், என் தரப்பிலிருந்து ஒரு சிறிய கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பொதுவாக, இதுபோன்ற விஷயங்களுக்குப் பதிலளிப்பதை நான் தவிர்த்துவிடுவேன். ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகளைக் கொண்டிருக்கும் உரிமை இருக்கிறது.

சில நேரங்களில், அந்தக் கருத்துகளைப் படிப்பதும், வேறுபட்ட கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதும் எனக்குப் பிடிக்கும். ஆனால், எங்கள் நேர்காணலைச் சுற்றி இப்போது நடக்கும் இந்தப் பரபரப்பு, ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தங்களுடைய கோபத்தைக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒருவரைத் தேடும் ஆத்திரம் கொண்ட கும்பலைப் போலவே தோன்றுகிறது.

உண்மையான நோக்கம்

ஏதோ ஒரு கட்டத்தில், இந்த விவகாரத்தின் உண்மையான நோக்கமே தொலைந்துபோய்விட்டது. ஒருவேளை, உங்களுடைய கண்ணோட்டத்திற்குப் பொருந்தாமல் இருந்திருக்கலாம். அல்லது, உங்களில் சிலர் அதைப் புரிந்துகொள்ளவே விரும்பாமல் இருக்கலாம். தேவையில்லாமல், என்னுடைய சமூக வலைதளப் பக்கங்களிலும் உங்களுடைய பக்கங்களிலும் கருத்துகள், விமர்சனங்கள், யாரும் கேட்காத அறிவுரைகள் எனத் தொடர்ந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. எங்களை நோக்கி மக்கள் வெளிப்படுத்திய உறுதியான தீர்ப்புகளும், கடுமையான விமர்சனங்களும் என்னைக் கொஞ்சம் அதிர்ச்சியடையச் செய்தன.

‘என்னடா நடக்கிறது இங்கே?’ என்று உண்மையிலேயே திகைத்துப்போனேன். அதனால், எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் விலகி நின்று சிந்தித்துப் பார்த்தேன். என் வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய சிறிய பார்வை இதுதான். ஆம், அந்த உரையாடல் நடந்தது உண்மைதான். ஆனால், எங்கள் இருவரில் யாருமே பிரமாண்டமான காதல் விண்ணப்பத்தையோ, திருமணத்திற்கான ஒரு பெரிய முன்மொழிவையோ எதிர்பார்த்திருக்கவில்லை. எங்கள் உரையாடலின் நோக்கம் வேறொன்று.

பரஸ்பர புரிதல்

வாழ்க்கையில் எத்தனை மகிழ்ச்சியான தருணங்கள் வந்தாலும் எத்தனை ஏற்றத்தாழ்வுகளையும் சவால்களையும் சந்தித்தாலும் நாம் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும் இந்த உறவுதான் நமக்கு வேண்டியது என்பதையும் இதுதான் அதற்கான சரியான நேரம் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் இருவருக்கும் தேவையான நேரத்தையும் இடைவெளியையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் விஜய்யின் விருப்பமாக இருந்தது. இறுதியில், நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம்.

காதலின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். ஒவ்வொருவரும் அவரவருக்கான காதலைக் கண்டடைய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் முழுக்க முழுக்க உணர்வுகளால் இயங்குபவள். அவர் எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பவர். எங்கள் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட தன்மைகள் தேவைப்படுகின்றன.

உண்மையான பந்தம்

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது யாராவது ஒருவர் காதலை வெளிப்படுத்துவதற்காகப் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்வதோ, முழங்காலில் மண்டியிட்டு மோதிரம் அணிவிப்பதோ அல்ல. அவையெல்லாம் வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமே. எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது ஒன்றாக இணைந்து ஒரு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்கிக்கொள்வது. இதுவரை நாங்கள் அதை மிக அழகாகச் செய்திருக்கிறோம் என்றே நினைக்கிறேன். எதையும் செய்யத் துணியும் அளவுக்கு நீங்கள் நேசிக்கும் ஒருவரைக் கண்டடையுங்கள். அதே அளவுக்கு உங்களுக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒருவரைக் கண்டடையுங்கள்.

ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்ளத் தயார்

ஆம், என் ஆணின் மீது எனக்கு அளவுகடந்த காதல் இருக்கிறது. அவர் மீது நான் இவ்வளவு பைத்தியமாக இருப்பது எப்போது தவறாகிப் போனது? நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணைக் காதலிக்கவே இல்லை என்றால், எதற்காக உலகத்தில் நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? அவர் என் வாழ்நாள் துணையாக இருக்கப்போகிறான். சாதாரணமான நாட்களிலும், அசாதாரணமான தருணங்களிலும் என்னுடன் இருக்கும் நண்பன். என் குழந்தைகளின் தந்தை. நான் வயதாகி முதுமையடையும்போதும் என்னுடன் இருப்பவன். நான் அவரை ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். நூறு முறை என்பது அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை.

தங்களுடைய சொந்தக் கற்பனைகளிலும், தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட கதைகளிலும் முற்றிலும் மூழ்கிப்போயிருப்பவர்களுக்காக இதையும் சொல்ல விரும்புகிறேன்… நாங்கள் இருவரும் எங்கள் சொந்த விருப்பங்களின்படியே எங்கள் வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் சொந்தத் தேர்வுகளாலும், கடின உழைப்பாலும் இந்த நிலையை அடைந்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இறுதிவரை, மீண்டும் மீண்டும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்போம்.

நமக்கான காதலை கண்டடைவோம்

எப்படிப்பட்ட காதல் இருக்க வேண்டும் என்ற உங்களுடைய கற்பனைக்குள் எங்களுடைய காதல் பொருந்தவில்லை என்றால், அதனால் என்ன? அதுவும் பரவாயில்லை அல்லவா? உங்களுடைய அழகான கற்பனைக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். மகிழ்ச்சியாக இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் நான் மனதார மகிழ்ச்சியடைவேன்; அவர்களை உற்சாகப்படுத்துவேன். குறைந்தபட்சம், நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டியது இதைத்தான் - நமக்கான காதலைக் கண்டடைவதும் மகிழ்ச்சியாக வாழ்வதும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ அனுமதிப்பதும்தான்.

SCROLL FOR NEXT