ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமன்னாவை ஜெயிலர் 2 படத்திற்குள் கொண்டுவர இயக்குநர் நெல்சன் சம்மதிக்கவில்லை. இந்த கோரிக்கையை இயக்குனர் நெல்சன் நேரடியாகவே நிராகரித்துவிட்டாராம்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள எதிர்பார்க்கப்பட்ட 'ஜெயிலர் 2' திரைப்படம் வருகிற வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், பட நிகழ்ச்சியின்போது நடிகை தமன்னா குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு அதில் இடம்பெற்ற பாடல்களும், குறிப்பாக நடிகை தமன்னாவின் நடனமும் மிக முக்கியக் காரணமாக அமைந்தன. இந்நிலையில், இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' படத்தில் தமன்னா இடம்பெறவில்லை என்பது ரசிகர்களைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் சிறு வருத்தத்தை அளித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜெயிலர் 2 படத்தில் எல்லாமே இருக்கிறது; ஆனால் ஒரேயொரு மிஸ்ஸிங் தமன்னா மட்டும்தான்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் தமன்னாவை ஒரு பாடலிலாவது ஆட வையுங்கள் என்று தான் இயக்குநர் நெல்சனிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமன்னாவை படத்திற்குள் கொண்டுவர இயக்குநர் நெல்சன் சம்மதிக்கவில்லை. ரஜினியின் கோரிக்கையை பற்றி கவலைப்படாமல், கதையின் தேவையை மட்டுமே முக்கியமாக கருதிய நெல்சன், “உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக எல்லாம் ஒரு பாடலை என்னால் வைக்க முடியாது சார்” எனத் கோரிக்கையை நேரடியாகவே நிராகரித்துவிட்டாராம்.
இயக்குநர் நெல்சன் தன்படம் குறித்து இவ்வாறு உறுதியாகக் கூறியது குறித்துப் பேசிய ரஜினிகாந்த், ‘ "நான் தமன்னா வேண்டும் என்று கேட்டது என் சொந்த விருப்பத்திற்காக அல்ல, ரசிகர்களுக்கு அது பிடிக்கும் என்பதற்காகவே கேட்டேன். ஒருவேளை எனக்குப் பிடித்ததை மட்டுமே நான் செய்துகொண்டிருந்தால், எப்போதோ திரையுலகில் தேவையற்றவராக மாறி பெங்களூரு சென்று சேர்ந்திருப்பேன். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதால்தான் இன்றும் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்" என்று நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் தெரிவித்தார்.
புதிய பாகத்தில் தமன்னா இடம்பெறவில்லை என்றாலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மிர்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை முழுமையாகக் கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.