சினிமா செய்திகள்

நான் தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன்: மனைவியை பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி தவறான நபரை திருமணம் செய்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7-இல் கலந்து கொண்ட போட்டியாளர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-இல் கலந்துகொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது திருமண வாழ்வில் சந்தித்த சவால்களையும், தனது மகளை பிரிந்திருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதீப் ஆண்டனி - பூஜா தம்பதி

பிரதீப் ஆண்டனி மற்றும் பூஜா ஆகியோர் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதையடுத்து தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரை பிரிந்து விட்டதாக கடந்த வாரம் சமூக வலைதளத்தில் பிரதீப் பதிவிட்டார்.

தவறான நபரை தேர்வு செய்துவிட்டேன்

இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “நான் ஒரு தவறு செய்துவிட்டேன். நான் தவறான நபரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நினைக்கிறேன், அது அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் என்னை ஒரு மிக மோசமான நபராக மாற்றிவிட்டது.

எனது மனைவி இன்னும் தனது சொந்த குடும்பத்துடனும் வாழ்க்கையுடனும் வாழ்ந்து கொண்டிருந்தாள். நான் ஒவ்வொரு நாளும் ஒருவரின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.

இன்னொருவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அது, இரண்டு எதிர் துருவங்கள் ஒவ்வொரு நாளும் மோதிக்கொள்வது போலவும், ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை வெறுப்பது போலவும் இருந்தது. அது எங்கள் இருவருக்கும் நியாயமற்றதாகத் தோன்றியது.

நான் என் திருமணத்திலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்துள்ளேன், ஏனென்றால் அந்த உறவில் என்னால் உண்மையிலேயே மூச்சுவிட முடியவில்லை” என்று அவர் பதிவிட்டார்.

இணையத்தில் விவாதம்

பிரதீப் பதிவிட்ட கருத்துக்கு சமூக வலைதளத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது குடும்பம் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அந்த பதிவு ஒரு உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் பதிவிடப்பட்டது என்றும், அந்த தருணத்தில் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தியதற்காக வருந்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு சுயநினைவு உள்ளது

இதுகுறித்து பிரதீப் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “யாராவது கவலைப்பட்டால், நான் நலமாக இருக்கிறேன். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட ஒன்றை பதிவிட்டது என் தவறுதான்.

ஆனால் அது அந்த தருணத்தின் ஒரு வெளிப்பாடு என்று நினைக்கிறேன், அதற்காக நான் வெட்கப்படவில்லை. விமர்சனங்களைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு எனக்கு சுயநினைவு இருக்கிறது. நீங்கள் தாராளமாக விமர்சிக்கலாம். நன்றி, உங்களை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT