சினிமா செய்திகள்

‘அந்தப் பெண்ணை மறக்கவே முடியவில்லை’: விஜய் சேதுபதியின் மகாராஜாவை பாராட்டிய டாம் ஹேங்க்ஸ்!

இப்படத்தில் சச்சனா நமிதாஸின் நடிப்பு, அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றுத் தந்தது.

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி மற்றும் சச்சனா நமிதாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் ‘மகாராஜா’.

இப்படம் விமர்சனரீதியாகவும், சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி சுப்பிரமணியம் மற்றும் அப்போது புதுமுகமாக இருந்த சச்சனா நமிதாஸ் ஆகியோரின் நடிப்பிற்காகவும் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

மேலும் இப்படத்தில் சச்சனா நமிதாஸின் நடிப்பு, அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றுத் தந்தது.

இப்படம் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் இப்படத்தையும், சச்சனாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.

என்னால் முடியாது

“என்னால் இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை... என்னவொரு அற்புதமான நடிகர். என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை; நான் அந்த ஆளைக் (செல்வம் கதாபாத்திரம்) கொன்றிருப்பேன்!” என டாம் ஹேங்க்ஸ் தெரிவித்ததாக சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 24 அன்று நடைபெற்ற சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது குப்தா இந்தத் தகவலை தெரிவித்தார்.

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த LACMA விழாக்களில் ஒன்றில் நான் டாம் ஹேங்க்ஸைச் சந்தித்தேன். அப்போது, ​​இந்தியாவில் இருந்து எந்த மூன்று திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டார்.

‘மகாராஜா’ படத்தைப் பார்க்கும்படி நான் அவரிடம் சொன்னேன். பின்னர், சில வாரங்களுக்குப் பிறகு நவம்பர் 7 அன்று நடந்த இரண்டாவது LACMA கலை மற்றும் திரைப்பட விழாவில் அவரை மீண்டும் சந்தித்தேன்.

அப்போது அவர் என்னிடம் முதலில் சொன்னது, ‘என்னால் இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை... என்னவொரு அற்புதமான நடிகர். என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை; நான் அந்த ஆளைக் கொன்றிருப்பேன்!’ என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT