சினிமா செய்திகள்

‘மற்ற பெண்களுக்காக என்னால் பேச முடியாது’: பெத்தி சர்ச்சை குறித்து ஸ்ருதிஹாசன் கருத்து

படங்கள் அல்லது கலை வழியாகப் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அணுகுமுறை, தனக்கு மிகவும் சுதந்திரமான மனநிலையைத் தருவதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பெண்களை போகப்பொருளாகவே சித்தரிக்கும் போக்கினை இந்திய சினிமா இன்னும் கைவிடவில்லை. குறிப்பாக, உச்ச நட்சத்திரங்களின் படங்களில் முக்கியமான ஒரு பெண்ணை மையப்படுத்தி ஒரு பாடல், படத்திற்கு தேவையே இல்லை என்றாலும் வைக்கப்படுகிறது.

சமீபத்தில் வந்த ஜெயிலர் 2 படத்தைக்கூட அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்நிலையில் படங்களில் இவ்வாறு வைக்கப்படும் பாடல் குறித்த தனது கருத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

சுதந்திர உணர்வு

அதில், பெத்தி படத்தில் தான் வந்த சிறப்பு பாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்.,

“எனக்கு நடனமாடுவது பிடிக்கும், அதேபோல் விதவிதமாக உடை அணியவும் பிடிக்கும்; இதுதான் எனது அணுகுமுறை. காட்சி ரீதியான பாலியல் வெளிப்பாடு (visual sexuality) குறித்த எனது அணுகுமுறை, எனக்கு மிகுந்த சுதந்திர உணர்வைத் தருகிறது.

மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நான் எதையும் செய்ததில்லை. ஏதேனும் ஒரு உடை எனக்கு சௌகரியமாக இல்லை என்றால், அதை அணியமாட்டேன் எனக்கூறி விடுவேன். அதனால், நான் ஒரு உடையை அணிந்திருக்கிறேன் என்றால், அதில் நான் முழுமையாக வசதியாக உணர்கிறேன் என்று அர்த்தம்.

இது தொடர்பாக நான் பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக என்னை விமர்சித்திருக்கிறார்கள்; ஆனால், அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை” என தெரிவித்தார்.

விழிப்புணர்வு

தொடர்ந்து பெத்தி படத்தில் ஜான்வி கபூர் காட்சிப்படுத்தப்பட்ட விதம் குறித்த கேள்விக்கு.,

“அவருடைய அனுபவத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பது எனக்குப் பொருத்தமானதாக இருக்காது.

என்னால் அந்தப் பெண்களுக்காகப் பேச முடியாது; அவர்களாலும் எனக்காகப் பேச முடியாது.

இன்று விழிப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. உதாரணமாக, இந்தத் திரைப்படத்தைப் பற்றி நாம் சற்று முன்பு மேற்கொண்ட உரையாடல், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியப்பட்டிருக்காது. இந்த உரையாடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என நானும், என் குழுவினரும் முயற்சிக்கிறோம். ஒரு ‘ஐட்டம் பாடல்’ என்றுதான் இல்லை; ஒரு காட்சியாகவோ அல்லது சண்டைக் காட்சியாகவோ கூட இருக்கலாம். நானும் எனது குழுவினரும் மிகச் சரியாக ஒருங்கிணைந்து செயல்படுவதால், இதில் சிக்கல் ஏதுமில்லை.

இருப்பினும், சில சமயங்களில் தவறு நடக்க வாய்ப்புண்டு; எனவே, நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க முயற்சி செய்கிறோம்.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT