‘இந்திய சினிமா’ தொடங்கிய மகாராஷ்டிராவில் இந்தி மொழிப் படங்கள் முதலிடத்தில் இருப்பதாகவும், மாநிலத்தின் மொழியான மராத்திப் படங்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
'விஷன் இந்தியா: கிரியேட்டிவ் எகானமி சமிட்' நிகழ்வில் பேசிய அவர், “திரைத்துறையின் பிறப்பு இங்கு மகாராஷ்டிராவில், மும்பையில்தான் நிகழ்ந்தது. மராத்தியர் தாதாசாகேப் பால்கேதான் இந்தப் பயணத்தை தொடங்கினார். இங்கு இந்தித் திரைப்படங்கள் வளரத் தொடங்கியபோது, மராத்தித் திரைப்படங்களின் பங்களிப்பு சுருங்க தொடங்கியது.
இதற்கு ஒரு காரணம் உண்டு. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில், அவர்களின் தாய்மொழி படைப்புகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தி இரண்டாவது இடத்தையும், ஆங்கிலம் மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன. இதே நிலைதான் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் உள்ளது. ஆனால், மகாராஷ்டிராவிலோ மக்களின் முதல் தேர்வு இந்தியாகவும், இரண்டாவது தேர்வு மராத்தியாகவும் இருக்கிறது.
இங்கு மக்கள்தொகை இருந்தும், அவர்களுக்கான படைப்புகளை நாம் உருவாக்குவதில்லை. அதுதான் ஒரு பெரிய சிக்கல். ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் குறைவாக இருக்கும்போது, உங்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பணியாற்ற முடியும். படத்தின் பிரம்மாண்டம் அதிகமாக இருக்கும்போதுதான், அந்த அனுபவம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு மராத்தி படத்திற்கும், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு இந்தி அல்லது தென்னிந்திய படத்திற்கும் இடையே ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் போது, ரசிகர்கள் இயல்பாகவே அந்த பிரம்மாண்டமான அனுபவத்தையே நாடுகிறார்கள்.
எனது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சுமார் 10–11 ஆண்டுகள் ஆகின்றன, நாங்கள் ஆறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளோம், அவை அனைத்துமே மராத்தி மொழியில் எடுக்கப்பட்டவை” என தெரிவித்துள்ளார்.