சினிமா செய்திகள்

Video: கவின் - நயன்தாரா இணையும் ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமத்தை பிரபல 'ஜீ5' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா மற்றும் இளம் முன்னணி நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஒரு முழுமையான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'ஹாய்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான பிரபு, ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி, எஃப்.இ.எஃப்.எஸ்.ஐ விஜயன் மற்றும் காவியா அறிவுமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாடல்கள் தந்த பலம்

ஜென் மார்ட்டின் இசையில் ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய "கண்ணக்குழியா" உள்ளிட்ட மூன்று பாடல்கள் ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது.

படக்குழு

இத்திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு சி.யு. முத்துச்செல்வன் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் 'ரவுடி பிக்சர்ஸ்', லலித் குமாரின் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் 'ஜீ ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.

தணிக்கைக் குழுவால் 'U/A' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமத்தை பிரபல 'ஜீ5' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதி

இத்திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தின வார இறுதியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதே தேதியில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் விஷாலின் 'மகுடம்' போன்ற பெரிய படங்கள் மோதவிருந்ததாலும், படத்தின் இறுதிப் பணிகள் மற்றும் புரொமோஷன் காரணங்களினாலும் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது, ஆகஸ்ட் 28 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

SCROLL FOR NEXT