சினிமா செய்திகள்

ஹபீபி- திரை விமர்சனம்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் படத்திற்கு தேவையான மென்மையான இசையை கொடுத்திருக்கிறார்.

Maalaimalar

கதை

தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹபீபி.

தென்காசி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் அவர்கள் வாழும் சமூகத்தின் கட்டுப்பாடுகள், குடும்பங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் சுற்றியுள்ள மக்களின் பார்வை காரணமாக அந்த காதல் பல்வேறு சோதனைகளை சந்திக்கிறது.

இந்த காதல் வெற்றி பெற்றதா? குடும்பங்கள் அதை ஏற்றுக்கொண்டனவா? காதலர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதையே உணர்வுப்பூர்வமாக சொல்கிறது ஹபீபி.

நடிகர்கள்

படத்தின் நாயகி மாளவிகா மனோஜ் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், குடும்ப பாசம், ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் அளவாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அதேபோல் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் தனது அனுபவமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.

இயக்கம்

இயக்குநர் மீரா கதிரவன், காதலை மட்டும் மையமாக வைக்காமல், குடும்ப உறவுகள், சமூக கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சார அடையாளங்களை பற்றியும் பேச முயற்சித்திருக்கிறார். வணிக அம்சங்களை அதிகம் நம்பாமல், கதையையும் கதாபாத்திரங்களையும் நம்பி படம் நகர்வது பாராட்டத்தக்க விஷயம்.

அதே நேரத்தில், படம் சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. பரபரப்பான திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு சில காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும் கதையின் உணர்வுப்பூர்வமான நகர்வு அந்த குறையை ஓரளவு மறக்கடிக்கிறது.

இசை

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் படத்திற்கு தேவையான மென்மையான இசையை கொடுத்திருக்கிறார். பாடல்களும், பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கு துணை நிற்கின்றன.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, கிராமத்து இயற்கை அழகையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அந்த மண்ணின் மணம் வீசுகிறது.