சினிமா செய்திகள்

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த பிரம்மாண்ட வரவேற்பு: நடிகை ஸ்ரேயா நெகிழ்ச்சி!

படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் எளிய மனிதநேயம் குறித்துப் பேசிய ஸ்ரேயா, ரஜினி மிக எளிமையாகவும், இயல்பாகவும் பழகக்கூடியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரேயா சரண், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிவாஜி: தி பாஸ்

நடிகர் ரஜினிகாந்தும் இயக்குநர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து 2007-இல் உருவாக்கிய பிரம்மாண்ட படமான 'சிவாஜி: தி பாஸ்' திரைப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இப்படத்தின் நினைவுகளையும், ரஜினிகாந்துடனான தனது முதல் சந்திப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரேயா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதன்முதலில் சந்திப்பதற்கு முன்பு தான் மிகவும் பதற்றமாகவும், பயமாகவும் உணர்ந்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தைப் பார்த்தவுடன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய்விடக் கூடாது என்பதற்காக, அவரோடு சேர்ந்து நடிப்பதற்கான ஒத்திகைக்குச் செல்வதற்கு முன்பாகவே, தன்னை ரஜினிக்கு அறிமுகப்படுத்தி வைக்குமாறு இயக்குநர் ஷங்கரிடம் ஸ்ரேயா கேட்டுக்கொண்டாராம். ஸ்ரேயாவின் இந்த பதற்றமான கோரிக்கையைக் கேட்டு இயக்குநர் ஷங்கர் சிரித்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

சென்னைக்கு வந்து 'சிவாஜி' படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டபோதுதான் அந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டமும், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற முன்னணி கலைஞர்களின் பங்கேற்பும் ஸ்ரேயாவுக்குத் தெரியவந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு வரை அந்தப் படத்தின் அறிவிப்பு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரேயாவை கவர்ந்த ரஜினியின் எளிமை

படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் எளிய மனிதநேயம் குறித்துப் பேசிய ஸ்ரேயா, ரஜினி மிக எளிமையாகவும், இயல்பாகவும் பழகக்கூடியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். படப்பிடிப்பின் போது தன்னுடன் மிகச் சிறந்த நண்பரை போல பழகி, தன்னை மிகவும் சௌகரியமாக உணருமாறு ரஜினி மாற்றியதாக ஸ்ரேயா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்ததாகத் தெரிவித்த ஸ்ரேயா, தனது ஆரம்ப காலத்தில் மிகக் குறைந்த பணத்துடன் ஃபிலிம் ஸ்கூலில் சேர்ந்து படங்கள் பார்த்த கதையை ரஜினி தன்னிடம் பகிர்ந்துகொண்டதைக் குறிப்பிட்டார். இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்த பிறகும் ரஜினி காட்டும் அடக்கமும், தனது வேலையின் மீது அவர் கொண்டிருக்கும் காதலும் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஸ்ரேயா நெகிழ்ந்துள்ளார்.