'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் புகழ்பெற்ற விஞ்ஞானியும், தொழில் அதிபருமான ஜி.டி.என்.நாயுடுவின் வாழ்க்கைப்படம்.
ஜி.டி.நாயுடுவான மாதவன், இளமைப்பருவம் முதல் விவசாயிகள் மீது பாசம் கொண்டுள்ளார். விவசாயிகளுக்காக சின்னச் சின்ன கருவிகளையும் கண்டுபிடித்து தொழில் புரட்சியையும் சத்தமில்லாமல் அரங்கேற்றுகிறார்.
இன்னொருபுறம் கடின உழைப்பால் தனது பஸ் தொழிலை விரிவுபடுத்தி மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார். மாதவனின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆங்கிலேயர்கள், வருமான வரித்துறை அதிகாரி ஜெயராம் மூலமாக அவருக்கு குடைச்சல் தருகிறார்கள்.
போலி ஆவணங்கள் மூலமாக அதிக வரியை மாதவனுக்கு விதிக்கிறார்கள். வரி செலுத்தாதவர் என்ற முத்திரையை உருவாக்கி, அவரது சொத்தை அபகரிக்கவும் சூழ்ச்சி செய்கிறார்கள்.
இந்தச் சூழ்ச்சியில் இருந்து மாதவன் தப்பினாரா, இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஜி.டி.நாயுடுவாக மாதவன் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். உடல்மொழியில் அப்படியே ஜி.டி.நாயுடுவை பிரதிபலித்துள்ள மாதவன் சந்தோஷம், சோகம், வெறுப்பு, அவமானம் என எல்லா பரிமாணங்களையும் காட்டி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
சத்யராஜ், ஜெயராமின் அனுபவ நடிப்பு படத்தை தாங்கிப் பிடித்துள்ளது. பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா, ஷீலா ராஜ்குமார் என அனைவரது நடிப்பும் சிறப்பு.
இதுவரை காமெடியில் கலக்கி வந்த கருணாகரன் இந்தப் படத்தில் எடுத்திருக்கும் புதிய பரிமாணம் ரசிக்க வைக்கிறது. நிச்சயம் இனி படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் அவர் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கலாம்.
உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் காட்சிகளுக்கு இடையேயான பிணைப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்கும் பிரியாமணியின் போக்கு புரியவில்லை.
சில இடங்களில் ஆவணப்படமாக காட்சிகள் நகருகின்றன. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையையும், அவரது சாதனைகளையும் இப்போதைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தப் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம குமார்.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்துகின்றன.