செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
குடும்பங்கள் கொண்டாடும் ஒரு பக்கா கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக உருவெடுத்துள்ள இப்படம், ரிலீசான வெறும் 3 நாட்களில் உலகளவில் ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'கட்டா குஸ்தி' முதல் பாகத்தின் மொத்த வாழ்நாள் வசூலை, இந்த இரண்டாம் பாகம் தன் அதிரடி வசூலால் வெறும் 3 நாட்களிலேயே முறியடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதியதால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே, ரிலீசான முதல் வார இறுதியிலேயே மிக அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாக 'கட்டா குஸ்தி 2' உருவெடுத்துள்ளது. இவரது கேரியரில் மாபெரும் வசூல் சாதனை படைத்த சைக்கோ த்ரில்லர் படமான 'ராட்சசன்' திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
முதல் பாகத்தில் மனைவியின் குஸ்தி ஆசைக்குத் தடையாக இருக்கும் கணவன், இந்த இரண்டாம் பாகத்தில் தன் மனைவியின் விளையாட்டு கனவுக்காக வீட்டைக் கவனித்துக் கொள்ளும் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக மாறியிருக்கும் வித்யாசமான கதைக்களம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லெட்சுமி கெமிஸ்ட்ரியுடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
மேலும், படத்தின் சக்சஸ் டூரின் போது மதுரையில் உள்ள நடிகர் சூரியின் ஹோட்டலுக்குச் சென்ற விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு, சூரிக்கு வீடியோ கால் செய்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி படத்திற்கான பாசிட்டிவ் டாக்கைக் கூட்டியுள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வெல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், சீன் ரோல்டனின் இசையில் தியேட்டர்களில் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வார நாட்களிலும் இதன் வசூல் வேட்டை தடையின்றித் தொடரும் என தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.