சினிமா செய்திகள்

பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா நடிக்கும் 'ஃபாதர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது!

'ஃபாதர்' பட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரையுலகில் தந்தை-மகன் பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், தந்தையின் தியாகத்தையும் அன்பையும் புதிய கோணத்தில் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள 'ஃபாதர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் இயக்குனர்


'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராஜா மோகன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அம்மா என்ற உன்னத உறவைக் கொண்டாடும் நம் சமூகத்தில், ஒரு தந்தையின் தியாகத்தையும் உழைப்பையும் பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான குடும்பக் கதையாக இத்திரைப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

கூட்டணி மற்றும் தயாரிப்பு

ஆர்சி ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் தயாரிப்பாளர் ஆர். சந்துரு இத்திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். பன்மொழி நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் 'லவ் மாக்டெய்ல்' புகழ் டார்லிங் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து தந்தை-மகனாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் அம்ருதா ஐயங்கார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு

இத்திரைப்படத்திற்கு நகுல் அபியங்கர் இசையமைத்துள்ளார். சுகுணான் ஒளிப்பதிவு செய்ய, ரகுநாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பாசப் போராட்டத்தையும், எமோஷனல் காட்சிகளையும் உள்ளடக்கிய இந்த 'ஃபாதர்' படத்தின் டீசர், வெளியானது முதலே சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது.