ஹாலிவுட்டின் மூத்த இயக்குநர் மைக்கேல் மான் தன்னைத் தானே தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
83 வயதான மைக்கேல் கான் பல கிளாசிக் ஆன ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ளார். ஹீட், தீஃப், மேன்ஹன்டர், கொல்லாட்ரல், தி இன்சைடர் என பல ஸ்டைலிஷான படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தவறுதலாகத் தனது காலில் சுட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்தச் சம்பவத்தை மைக்கேல் மானின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் துப்பாக்கி சுடும் மையத்தில் அவர் தனது துப்பாக்கியை எடுத்து வைக்க முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
கடைசியாக 2023 இல் அவர் இயக்கத்தில் ஆடம் டிரைவர் மற்றும் பெனிலோப் குரூஸ் நடிப்பில் 'ஃபெராரி' எனும் திரைப்படம் வெளியானது.
1995 இல் மைக்கேல் மான் இயக்கத்தில் ராபர்ட் டி நீரோ, அல் பேச்சினோ நடிப்பில் வெளியான ஹீட் படம் ஹாலிவுட் படங்களில் தனியிடம் பெற்றதாகும். அதன் இரண்டாம் பாகத்தை , "ஹீட் 2" என்ற பெயரில் இயக்கும் முயற்சியில் மைக்கேல் மான் ஈடுபட்டு வருகிறார்.
இத்திரைப்படத்தில் திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கிறிஸ்டியன் பேல் மற்றும் ஆடம் டிரைவர் ஆகியோர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.