‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு, பறந்து போ உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர்.
இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.
ராம் தற்பொழுது ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது.
குறிப்பாக 46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்பட்டது.
இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும்.
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. ரொமேனியாவில் நடந்த ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
பார்வையாளர்களை காட்சியமைப்பினால் பிரமிப்பில் ஆழ்த்தும் 'நோ லிமிட்' எனும் பிரிவில் 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வானது.
படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் முன்னதாக வெளியாகி கவனம் பெற்றிருந்தன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சிறப்பு டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.